2021 மே 08, சனிக்கிழமை

'மனசுக்குள்ள பெரிய தனுஷுனு நினைப்பு'... பிறந்தநாள் ஸ்பெஷல்

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்கும்' என ஒரு இளைஞன் பேசியயது பன்ச் ஹிட் தான். ஆனா, அந்தப் இளைஞனை பார்த்த உடனே தமிழ் ரசிகனுக்கு பிடித்துப் போனது.

அது ஒரு பொங்கல் பண்டிகை காலம் கமலின் விருமாண்டியும் இன்னும் சில திரைப்திரைப்படங்களும் வெளியாக திட்டமிட்டிருந்தார்கள். அப்போது கமல் 'அந்த பையன் திரைப்படமும் ரிலீஸ் ஆகுதாமே.. நாம வேணும்ன்னா 26ஆம் திகதி வரலாமா' எனக் கேட்டாராம்.

அந்த பையன் நடித்து வெளியாகியிருந்த மூன்று திரைப்திரைப்படங்களுமே வெள்ளிவிழா கண்டிருந்தன. கமல் அப்படி கேட்டது உண்மையா இல்லையா என்பது ரகசியம்தான்;. ஆனால், அந்த பையனின் மார்க்கெட் அன்று அந்த ரேஞ்சுதான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.

2002 மே மாதம். அந்த வருடத்தில் அதுவரை வெளியாகி இருந்த திரைப்படங்களில் கன்னத்தில் முத்தமிட்டாலும், ஜெமினியும் மட்டுமே கவனம் ஈர்த்திருந்த நிலையில் பெரிய நடிகர்கள் இல்லாமல், பப்ளிசிட்டி இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியானது.

விமர்சகர்களின் கழுகுக் கண்களில் இருந்துதான் எதுவுமே தப்பாதே. திரைப்படத்தை கால் மேல் கால் போட்டுக்கொண்டு குத்திக் கிழித்தார்கள். அடல்ட்ஸ் ஒன்லி கன்டென்ட் மீதான விமர்சனம் ஒரு கட்டத்தில் அபத்த விமர்சனமாகிப் போனது.

யார்றா இவன்? ஆளும் மூஞ்சியும். ச்சை! என திரைப்படத்தில் நடித்த இளைஞனை வசை பாடினார்கள் விமர்சன சிகாமணிகள். பொதுமக்களும்தான். பின்னர் வழக்கம் போல தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கினார்கள்.

ஒரு வருடம் கழித்து அதே இளைஞன் நடித்து மற்றொரு திரைப்படம் ரிலீஸானது. யுவனின் புண்ணியத்தில் இந்த முறை பப்ளிசிட்டிக்கு பிரச்னையில்லை. ஓராண்டில் அந்த இளைஞனை பற்றிய மதிப்பீடு கொஞ்சமும் மாறாமல் தியேட்டருக்குள் வந்தமர்ந்தனர்.

'என்கிட்ட நிறம் இல்ல, களை இல்ல, பொடிபில்டர் கெட்டப் இல்ல. ஆனா வேற ஒண்ணு இருக்கு' என மொத்த ஃப்ரேமையும் ஆக்ரமித்தான் அந்த ராட்ஷசன். ஒரு காட்சியில் கொட்டும் மழையில் வெறி பிடித்தவனாய் 'திவ்யா திவ்யா' என அவன் கதற, தியேட்டரின் ஒரு மூலையில் சன்னமாய் எழுந்த கைதட்டல் சத்தம் சீக்கிரமே மொத்த தமிழகத்திற்கும் பரவியது.

'யார்றா இவன்?' என்றவர்கள் 'தனுஷ் சார்' என்றார்கள். தமிழ் சினிமா இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த கலைஞனை கண்டெடுத்த தருணம் அது.

இந்தக் கலைஞனை, அடுத்த வீட்டு இளைஞனாக்கிய பெருமை சுப்ரமணிய சிவாவுக்கும் தீனாவுக்குமே சேரும். 'மன்மத ராசா' வைரஸ் தமிழகத்தைப் பாடாய் படுத்தியது. போதாக்குறைக்கு நகைச்சுவை, சென்டிமென்ட் என பின்னிப் பெடலெடுத்தார் தனுஷ்.

மூன்றே திரைப்படங்களில் கோலிவூட்டின் முக்கிய ஸ்டார். இருபது வயதில் எவரும் இப்படியான இமாலய உயரத்தை தொட்டதில்லை என ஊடகங்கள் புகழ்ந்துதள்ளின.

'தனுஷ் தொடர்ந்து 7 திரைப்படங்கள்ல ஓப்பந்தம் ஆயிருக்காராம். அடுத்த 5 வருடத்துக்கு கோல்ஷீட் இல்லையாம்' என கோடம்பாக்கக் காற்றில் எக்கச்சக்க தகவல்கள். இதற்கு நடுவில் 'எங்க திரைப்படம்தான் முதல்ல ரிலீஸாகணும்' என்ற தயாரிப்பாளர்களின் போட்டி வேறு.

2004ஆம் ஆண்டு இப்படி மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' திரைப்படத்தில் மட்டுமே கொஞ்சம் 'தனுஷ்' இருந்தார். மற்ற இரண்டு திரைப்படங்களும் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டன.

அதே ஆண்டில் ஒரு ஊடகவிலாளர் சந்திப்பு. சில பல பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்த அந்த அரங்குக்கள்; விறுவிறுவென வந்த தனுஷ் 'நானும் ஐஸ்வர்யா ரஜினியும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்' என சொல்லிவிட்டு சடாரென வெளியே பறந்தார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரத்துக்கு இவர் மருமகனா? புருவங்கள் வில்லாய் வளைந்து தெறித்தன. எக்கச்சக்க தனிநபர் தாக்குதல்கள் வேறு. தகுதி ஒப்பீட்டில் தொடங்கி கொச்சையான சொற்கள் வரை அவரை பதம் பார்த்தன. ரியாக்ட் செய்யவே இல்லை தனுஷ்.

'தனுஷ் கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். முதிர்ச்சி இல்லை. ரஜினி மருகமகனாயிட்ட திமிரு' என விமர்சன வேதாளம் விறுவிறு வேகத்தில் மரம் ஏறியது. அந்நேரத்தில் அந்த மிராக்கிள் நடந்தது.

'அது ஒரு கனாக்காலம்' திரைப்படத்தை தொடங்கினார் பாலு மகேந்திரா. 'இவன்கிட்ட ஒரு ப்ரெஞ்சு மாடலுக்கான எல்லாத் தகுதியும் இருக்குய்யா, பெரிய ஆளா வருவான் பாருங்க' - தன் சீடர்களிடம் அவர் உதித்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இவை. சும்மாவா அவர் ஆசான்?

தமிழ் சினிமாவில் ஒரு ரௌடி எப்படி இருப்பான்? பல்க் பாடியும், முரட்டு மீசையுமாய். அவன்தான் ஹீரோ என்றால் கொஞ்சம் ஆடை அலங்காரங்களும் தூள் பறக்கும். இது எதுவுமே இல்லாமல் தனுஷ் புதுப்பேட்டையில் அருவாளை தூக்கிக் கொண்டு வந்தபோது எப்படி ஒர்க் அவுட் ஆகும்? என சிரித்தவர்கள்தான் அதிகம்.

'எதுக்கு சிரிக்குறீங்கனு தெரியுது. நக்கலு. சிரிக்க வேணாம்னு சொல்லு' என அந்த திரைப்படத்திலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்பதைப் போன்ற கெத்து இது.
திமிரு, வெயில், பருத்திவீரன் என தமிழ் சினிமாவே தென் தமிழகத்தை சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் தலைநகரை மையமாக வைத்து இரண்டு சினிமாக்கள் வெளியாகி வெற்றி நடை போட்டன. ஒன்று சென்னை 28, மற்றொன்று பொல்லாதவன்.

முதலாவதன் வெற்றிக்கு யுவன், வெங்கட் பிரபு, நட்சத்திர பட்டாளம், புதுவகை ட்ரீட்மென்ட் என பல காரணங்கள். பொல்லாதவனுக்கு தனுஷும், வெற்றிமாறனும்.

கொஞ்ச நாளைக்கு கமர்ஷியல் குதிரையில் பயணம். பின் மீண்டும் வெற்றிமாறன். இம்முறை மதுரை மண். பார்த்துச் சலித்த புழுதியில் கிடைத்த உலக சினிமா. கோட்டை தாண்டினால் சேவல் தோற்றுவிடும் என்பதைப் போல கொஞ்சம் மிஸ்ஸானாலும் போரடித்து விடக்கூடிய கனமான கதை. மொத்த கனத்தையும் அழுக்கேறிய பனியனோடு சுமந்தார் தனுஷ். விளைவு, தேசிய விருது. தன் மீதான எதிர்மறை விமர்சன சுனாமியில் ஸ்விம்மிங் செய்து தனுஷ் வாங்கிய தங்கமெடல் அது.

அதே ஆண்டின் இறுதியில் ஒரு நள்ளிரவில் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. தமிழும் இல்லாமல் இங்கிலீ{ம் அல்லாமல் தங்க்லீஷில் வெளியான அந்தப் பாடல் விடிந்தவுடன் உலக ஹிட் ஆகும் என அந்த இராத்திரியில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நடிக்கவே லாயக்கு இல்ல' என இகழப்பட்ட இளைஞன் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் எல்லாம் கலை குறித்து கெஸ்ட் லெக்சர் கொடுக்கக் காரணமாக அமைந்தது அந்த தனிப்பாடல்.

உலக ஊடகங்கள் மொய்க்கத் தொடங்கிய பிறகு பொலிவூட் மட்டும் சும்மா இருக்குமா என்ன? கொத்திக் கொண்டு பறந்தார்கள். சுறுசுறு துறுதுறு இளைஞனாய் ராஞ்சனாவில் அவர் அசத்த, கிடைத்தது இமாலய வாய்ப்பு. ஷமிதாப். எந்த சீனிலும் அமிதாப் மட்டும் தெரிந்துவிடாதபடியான நேர்த்தியான நடிப்பு அது. வாய்பேச முடியாதவராய் இவர் நடித்த நடிப்பில், ஊமையாய் நின்றார்கள் பொலிவூட் பாட்ஷாக்கள்.  

'நாம் விமர்சித்த மீசை இல்லா இளைஞன் இல்லை இது' என விமர்சகர்கள் இப்போது உணர்ந்திருந்தார்கள்.
மயக்கம் என்ன, 3, மரியான் என க்ளாசிக் இன்னிங்க்ஸ் ஆடியாயிற்று. இறங்கி அடிக்க வேண்டிய நேரமிது. வேலை இல்லா பட்டதாரியாய் வந்தார். இன்ஜினியரிங் படித்த வேலை இல்லா இளைஞன், வீட்டில் ஏச்சு வாங்கிவிட்டு வெளியே உதார் விடும் தோரணை.

பக்கத்துவீட்டு ஏஞ்சலை ஏக்கமாய் பார்ப்பது, வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் பாரு என்ற வீராப்பு என திரையில் இருந்தது சாட்சாத் நாங்கள்தான். தனுஷ் ஒவ்வொரு அடிக்கும் திமிறும்போதெல்லாம் குதித்தது எங்கள் குருதியும்தான்.

 'கலர் முக்கியமில்ல, களையும் திறமையும் இருந்தா போதும்' என சூப்பர் ஸ்டார் போன தலைமுறையில் மாற்றி அமைத்த விதியை 'அட.. எதுவும் தேவையில்ல, திறமை இருந்தா போதும்' என நவீனப்படுத்தியது தனுஷ். 'நான் ஹீரோவானது ஆட்டோக்காரரும், ரிக்ஷாக்காரரும் ஹீரோ ஆன மாதிரி' - இது அவரது வார்த்தைகள். சாமானியனும் ஹீரோவாய் உணரத் தொடங்கியது இந்த மாற்றத்தினால்தான்.

நடிச்சாச்சு, சம்பாதிச்சாச்சு, செட்டில் ஆயாச்சு என்றில்லாமல் நண்பனான சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி எதிர்நீச்சல் தயாரித்தது முதல் காக்கா முட்டை, விசாரணை போன்ற புதிய முயற்சிகளுக்கும் தயாரிப்பாளராய்த் தோள்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தேனிக்காரர், தேர்ந்த நடிகர் என்பதை எல்லாம் தாண்டி தனுஷை பிடிக்கக் காரணம் இருக்கிறது. ஒல்லியாய் கன்னம் ஒட்டி திரிபவர்களை கொஞ்ச காலம் முன்புவரை 'ஓமக்குச்சி நரசிம்மன், தயிர்வடை தேசிகன்' என்றுதான் கிண்டலடிப்பார்கள். அப்போதெல்லாம் கூனிக் குறுகிய உடல் இப்போது, 'மனசுக்குள்ள பெரிய  தனுஷுனு நினைப்பு' என பிறர் சொல்லும்போது நிமிர்ந்து அமர்கிறது. அதற்காகவே 'லவ் யூ தனுஷ்'.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரோ!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X