2021 மே 06, வியாழக்கிழமை

'அங்கவீனமடைந்த எவரையும் கட்டாயப்படுத்தி விலக்கவில்லை'

George   / 2016 ஜூலை 27 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

அங்கவீனமடைந்த எந்தவொரு இராணுவ வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்லவில்லை,  தொடர்ந்தும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள அங்கவீனமடைந்த வீரர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகிச்சென்றனர். அவர்கள் விலகிச்செல்லும் போது கடிதம் கொடுத்துவிட்டே சென்றனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அங்கவீனமடைந்த வீரர்கள் முப்படைகளிலும் தற்போதும் சேவையில் உள்ளனர். அவர்கள் விரும்பும் வரை சேவையில் இருக்கமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் கலந்துகொண்டு இராணுவ அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பிரிகேடியர் சனத் பெரேரா கருத்து தெரிவிக்ககையில்,  இராணுவத்தில் 10 வருடங்கள் சேவையாற்றிய அதிகாரிகள் மற்றும் 12 வருடங்கள் கடைமையாற்றிய சாதாரண வீரர்களுக்கு 55 வயதுக்குப் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும். இது சகல அரச ஊழியர்களுக்கும் வழங்கப்படும் முறைகளுக்கு அமைவானது.

இராணுவ சேவையில் அங்கவீனமடைந்து , ஓய்வு பெற்று சென்ற பலர் 10, 12 வருடங்களுக்கு குறைவான காலம் சேவையில் ஈடுபட்ட நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களுக்கு 55 வயதுக்குப் பின்னர் ஓய்வூதியம் வழங்குவதில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியச் சட்டத்தில் இடமில்லை.

பாதிக்கப்பட்ட வீரர்கள் சேவையில் இல்லாவிட்டாலும் சகலருக்கு அடிப்படையாக  மாதாந்தம் 55ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அதுத் தவிர  அங்கவீனமடைந்தவர்களுக்கான கொடுப்பனவு தொகையான 9 ஆயிரம் வழங்கப்படுகின்றது.

இவை 55 வயதுவரை வழங்கப்படும். அதன்பின்னர் தான் அவர்களுக்கு இக்கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்கப்படும். அதில் 12வருட சேவைக்காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு  ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலேயே நடைமுறைச் சிக்கல் காணப்படுகின்றது' என்றார்.

'இதேவேளை கடந்த 20ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த ஜனாதிபதி, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி முப்படை அதிகாரிகள், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர், நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை(25) இது தொடர்பில் கலந்துரையாடினர்' என பிரிகேடியர் பிரசன்ன சந்திரசேகர கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .