2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அரசமைப்புச் சபை குழப்பத்தால் ஒன்றிணைந்த எதிரணியில் பிளவு

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் காரணமாக, அந்த எதிரணி, இரண்டாகப் பிளவுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளதாக அரசியல் தகவல் தெரிவிக்கின்றது.   

அரசமைப்பு சபையிலிருந்து, ஒன்றிணைந்த எதிரணி விலகவேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்தே, அந்த எதிரணிக்குள் கருத்துவேறுபாடுகள் தோன்றியதாக அந்தத் தகவல் தெரிவித்தது.   

அரசமைப்பு சபையிலிருந்து விலகவேண்டுமென்று, அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், தேசிய சுதந்திர முன்னணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், அதன் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துவந்தனர். 

இந்நிலையில், தனது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எம்.பிக்கள் ஐவரும், இந்த அரசமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கமாட்டார்கள் என்று, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த 19ஆம் திகதியன்று கடிதத்தை கையளித்திருந்தார்.   

இதனையடுத்தே, ஒன்றிணைந்த எதிரணிக்குள் உள்வீட்டு குழப்பங்கள் ஆரம்பித்துள்ளதாக அந்த அரசியல் தகவல் தெரிவிக்கின்றது.   

அரசமைப்பு பேரவையிலிருந்து விலகாமல், அதில் தொடர்ந்து இருந்தால், மட்டுமே நாட்டுக்கு பாதகமான யோசனைகளுக்கு எதிராக குரல்கொடுக்க முடியும். அதிலிருந்து விலகினால், குரல்கொடுக்கமுடியாத நிலைமையே ஏற்படும் என்றும் அந்த எதிரணியில் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

ஆகையால், அரசமைப்பு பேரவையிலிருந்து விலகவேண்டாமென்று, விமல் வீரவன்ச உள்ளிட்ட, அந்த முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும், சிரேஷ்ட உறுப்பினர்களின் கோரிக்கையை கணக்கிலெடுக்காது, இராஜினாமா கடிதத்தை விமல் வீரவன்ச, கையளித்துவிட்டார். இந் நிலையிலேயே ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.   

இது இவ்வாறிருக்க, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்துடன் இணைந்து செய்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுகொண்டிருக்கின்றது என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   

ஆகையால், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பிரபல்யமானவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதற்கு தயாராகவே இருப்பதாக துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தயாராகவே இருக்கின்ற அந்தக்குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடுவதற்கு விரும்பவில்லை என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியையும் விரும்பவில்லை என்றும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .