2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'ஈழக் கனவை எறிகணைகளால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது'

Thipaan   / 2016 மார்ச் 27 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்த ரீதியில் எல்.ரீ.ரீ.ஈ, தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை.

எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பது, துப்பாக்கிகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நேர்காணலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

இந்த நேர்காணலின், கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமானவற்றுக்கு அம்மூவரும் வழங்கிய பதில்களின் தொகுப்பு:

ஜனாதிபதி பதில்

நான், ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்து சென்றுள்ள இக்கால எல்லைக்குள்,  நான் செய்தவை என்ன, என்ன நடந்துள்ளது, மகிழ்ச்சியடையக் கூடிய நிலைமையில் நாம் உள்ளோமா, எனச் சிலர் கேட்கின்றனர்.

அது, எனக்கும் பிரதமருக்கும்,  அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும்,  மக்களுக்கும் ஒரு புதிய அனுபவமாகும். ஆட்சியமைப்பதற்கும் ஆளும் கட்சியினை தோல்வியடையச்செய்வதற்கும் இருபுறங்களில் இருந்து 60 வருடங்களுக்கு மேலாகப் போராடிய இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிசெய்கின்றமையே, அந்தப் புதிய அனுபவமாகும்.

ஒருபுறத்தில் இது மிகவும் சிக்கல்மிக்கதாகும். இலகுவான விடயமல்ல என்பதையும் நாம் அறிவோம். நாட்டு மக்களும் இரண்டு கட்சிகளின் அங்கத்தவர்களாக பிரிந்தே இருக்கின்றனர்.

ஆகையால், கருத்து ரீதியான இந்த வேறுபாடு, மரண வீடுகளிலும் சரி கல்யாண வீடுகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி காணப்பட்டே வருகின்றது.

எமது சமூகத்தின் மாற்றத்துக்குத் தேவையான எமது நல்லாட்சி, சிலரின் பரிகாசத்துக்கும் கேலிக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாக்கப்பட்டே வருகின்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள், கண்ணுக்குப் புலப்படக்கூடிய வகையில் அமையவில்லை, வேலைகள் மந்தகதியாகவே நடைபெறுகின்றன என்று கூறுவதை  நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நானும் அமைச்சராக இருந்த எமக்கு முந்திய ஆட்சியானது,  வீதிகளை அமைக்கின்ற போது அந்த வீதியை அமைக்கப்போவதாகவும் அதைக் குறிப்பிட்ட 3 நிறுவனங்களுக்கு கொடுக்கப்போவதாகவும் அறிவித்து அனுமதி பெற்ற மறுதினமே, அந்நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் சுபாவத்தைக் கொண்டிருந்தது. எந்தவொரு செயற்றிட்டத்துக்கும் கேள்விப்பத்திரங்கள் கோரப்படுவதில்லை.

எம்மை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக வாக்களித்த மக்கள், நல்லாட்சியினை எதிர்பார்த்தே வாக்களித்தனர். அதன் முதல் அங்கமாக நிதி முகாமைத்துவம், நிதியைக் கையாளுவது பற்றிய ஒழுங்குகள் ஆகியவற்றைப் பின்பற்றும் நல்லாட்சியினையே எதிர்பார்த்தனர்.

ஆகையால் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும், கேள்விப்பத்திரம் கோரப்பட்டே செயற்படுத்த வேண்டும் என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடித்துவந்துள்ளோம்.

நாட்டு மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். நானும் அமைச்சராகவிருந்த கடந்த ஆட்சியின் முன்னாள் ஜனாதிபதிக்கு, உத்தியோகபூர்வமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்த பின்னணியிலும், அவர் எதற்காக தேர்தலைப் பிரகடனப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதியோ அவரைச் சார்ந்த பொறுப்புக்கூறத்தக்க ஒருவரோ, இதுவரை விடைகூறவில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி தேர்தலைப் பிரகடனப்படுத்தாதிருந்தால், முன்னாள் ஜனாதிபதியே தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். ஆயினும், முன்னைய அரசாங்கத்தின் பொறுப்புமிக்க ஓர் அமைச்சராக இருந்த நான் அறிந்தவகையில், முன்னாள் ஆட்சியாளருக்கும் அவரது சகாக்களுக்கும், நம் நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் முகம்கொடுக்கநேர்ந்திருந்த சில முக்கிய சவால்களுக்கு முகம்கொடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. விடைகாணமுடியாத அவ்வாறான பிரச்சினைகளுக்கு விடைகாணும் வகையில், அவசர தேர்தல் ஒன்றைப் பிரகடனப்படுத்தவேண்டும் என்ற தீர்மானம் அவர்களால் எடுக்கப்பட்டது.

சில விடயங்கள்,  ஜெனீவா வரை சர்வதேசமயமானது. அதே கேள்விகளுக்கான பதிலென்ன என சர்வதேசம் எம்மிடம் வினவியது. அத்தோடு, யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டை எல்.ரீ.ரீ.ஈ

பயங்கரவாதத்திலிருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த குழுவினர்கள் பல வழிகளிலும் சர்வதேசமயப்படுத்தினர்.

படைவீரர்களுக்குப் பங்கம் விளைவிக்கப்படுகிறது என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால், சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டுமாயின், எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு, உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுகளிலிருந்து மீள வேண்டும்.

அக்குற்றச்சாட்டுகளில் இருந்து மீளும் வகையில், ஏதேனும் ஓர் இடத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை வழங்குவது சரியா அல்லது எமது நாட்டுக்காகப் பாடுபட்ட, நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றிய அனுபவமும் ஆற்றலும் மிக்க எமது படையினர் மீது அவதூறுகளைச் சுமத்துவதற்கு இடமளிப்பது சரியா அல்லது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கீர்த்திமிக்க முப்படைகளாக எமது படைகளின் பெயர்களைத் தக்கவைத்துக்கொள்வதா?

யுத்தகாலம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக எமது படையினருக்கு எத்தனை பயிற்சி வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காவால் எமது படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சியினை இழக்க நேரிட்டது. இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பல பயிற்சிகளை இழக்க நேர்ந்தது.

எமது புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின், அவ்வாறு இழக்க நேர்ந்த வாய்ப்புகளை மீண்டும் எமது படையினருக்குப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. உலக தரத்திலான பயிற்சிகளை, அனுபவங்களை, அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, இப்போது எமது படையினருக்குக் கிடைக்கப்பெற்று வருகிறது. முதலில் நான் குறிப்பிட்ட அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் எந்த ஒரு விசாரணையும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டவையல்ல.

எக்னெலிகொட சம்பவத்தை எடுத்துக்கொண்டால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவமாகும். ஆகையால், அதன் உண்மை நிலையை அறிவதற்காக விசாரணையினை ஆரம்பிக்க நேர்ந்தது. விசாரணை அவ்வாறு முன்னோக்கிச் செல்லும் போதே, அச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றவகையில் படையினர் சிலர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டிவந்துள்ளது. விசாரணை முடிவில் அப்படைவீரர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்பது நிரூபணமாகும். இவ்வாறான சம்பவங்கள் பற்றி நியாயமான விசாரணைகளைக் கோரும் உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் பதிலளிக்கவேண்டியது, அரசின் கடமையாகும். அவ்வாறு பதிலளிப்பதன் மூலம், களங்கமற்ற தன்மையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே, ஒரு நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.

இங்கே பௌத்த பிக்குகள் பற்றி நீங்கள் எழுப்பிய வினாவைப் பார்ப்போம். சில பௌத்த பிக்குமார்கள், நீதிமன்றம் செல்ல நேர்ந்த போது அங்கே அவர்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக, அவர்களைக் கைதுசெய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கு அரசாங்கமா குற்றவாளி? அடுத்ததாக, சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு உட்பட இன்னும் பலர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

காடுகளில் வாழ்ந்துவந்த இந்த யானைகளைத் திருடியவர்கள் யார்? அத்திருட்டுக்கு உதவியவர்கள் யார்? அதற்கு ஒத்துழைத்தவர்கள் யார்? அவற்றுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வனவிலங்குகளை வேட்டையாடுதல், திருடுதல், சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் ஆகிய அனைத்துமே குற்றமாகும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி, சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக நான் பதவியேற்ற நேரம் வரை, இந்த ஜனாதிபதி மாளிகையில் கூட இரண்டு யானைகள் இருந்தன.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், தலைமைப் பிக்குமார்களை உள்வாங்கிய பிக்குமார்களையும் ஏனைய மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஆலோசகர் சபையொன்றையும் உருவாக்கியுள்ளோம்.

இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக, நம்நாட்டின் இறைமையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாகவும் நமது நாட்டுக்குப் பாதகமாக அமைகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் செய்துகொள்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஒரு பிரிவினரே அவ்வாறானதொரு குற்றச்சாட்டை எம்மீது சுமத்துகின்றனர்.

ஆனால், மிகத் தெளிவாக நாம், நமது நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த அமைப்புகளிடமிருந்தும் முன்னேற்றமடைந்த உதவி நாடுகளிடமிருந்தும் எமக்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளையும் பேணவேண்டும்.

நம்நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதே, அதன் அடிப்படை நோக்கமாகும். முன்னைய அரசாங்கமே சீபா என்ற உடன்படிக்கையை, இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்டது. அந்த உடன்படிக்கையிலிருந்த எமது நாட்டுக்கு பாதகமாக அமையக் கூடிய விடயங்களை அகற்றி, நமது நாட்டுக்குச் சாதகமான ஓர் ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நாங்கள் இப்போது ஈடுபட்டுவருகிறோம்.

இதுவரை, அந்த உடன்படிக்கை பற்றிய இறுதி அறிக்கையினைத் தயாரிக்கவோ, உடன்படிக்கையில் கைச்சாத்திடவோ இல்லை. இருதரப்புப் பேச்சுவார்த்தைகளே தற்போது நடைபெறுகின்றன. அதையடுத்து, அவ்வொப்பந்தங்களை மேற்கொள்ள முன்னர், அவற்றில் என்ன உள்வாங்கப்பட்டுள்ளன என்பன பற்றி, நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவோம்.

இவர்களின் இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் குறுகிய அரசியல் நோக்கமே காரணமாகும். ஆகையால், நமது நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கும், எமது நாட்டுக்குப் பாதகமாக அமையும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப் போவதில்லை என மிகத்தெளிவாகக் கூறவிரும்புகிறேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அகற்றுவதற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியிலிருந்து அகற்ற முயல்வதாகக் கூறப்படுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இரு கட்சிகளின் செயலாளர்களும் அளித்த பதில்:

சு.க பொதுச் செயலாளர் பதில்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க பதிலளிக்கையில்,

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்ததன் மூலம், இதுவரை இந்த நாட்டில் சாதிக்கமுடியாமல் இருந்த சாதகமான விடயங்களை, எதிர்கால சந்ததியின் நன்மைக்காகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையினை, தேர்தலுக்கு முன்னதாகவே தற்போதைய ஜனாதிபதி முன்வைத்தார்.

மக்களின் ஆணையுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதே, அதன் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்விளைவாகவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவி வகிக்கின்றனர்.

தேசிய அரசாங்கம் இரகசியமானதல்ல. மறுபுறத்தில், ஓர் ஆவணத்துக்காக மட்டும் மட்டுப்படுத்தவில்லை. ஆகவேதான், இரு கட்சிகளும் மிகத் தெளிவான இணக்கப்பாட்டுடன், நாட்டின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு செயற்பட்டுவருகின்றன.

சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் அவ்வாறான அவதூறான வேலைகளில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஈடுபடாது என்பதையும் கூறவேண்டும்.

எமது இந்த நல்லிணக்கச் செயற்பாட்டினை ஜீரணித்துக்கொள்ள முடியாத சிலரே, அப்பட்டமான அவதூறுகளைக்

கூறி வருகின்றனர். மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் விருப்பத்துக்கு இந்நாட்டை முன்னகர விடுவோமாயின், அது ஒரு போதும் இந்நாட்டுக்கு நன்மை பயக்கப்போவதில்லை.

ஆகையால், நாட்டு மக்கள் என்றவகையில் நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டுமா அல்லது சுயநலவாத சிறு கும்பல்களின் தேவைகளுக்கு அமைய நாட்டைச் சீரழிய விடுவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். மிகச்சிலரின் தேவைக்கு அமைய, நாட்டைச் சீரழிக்க விடமுடியாது என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும்.

ஐ.தே.க பொதுச் செயலாளர்

இக்கேள்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர் ஹாசிம் பதிலளிக்கையில்,

அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்தவர்களே, சூழ்ச்சிகளைப் பற்றி பேசுகின்றனர். உண்மையிலேயே அதைச் செய்யவேண்டிய தேவையிருந்திருப்பின், ஓகஸ்ட் 17 ஆம் திகதியே சிறந்த தருணமாக இருந்தது,

பொதுத் தேர்தலின் பின்னர் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தனியாக ஆட்சியமைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினார்கள். நாம் மேற்கொண்டுள்ள மாற்றமானது, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அப்பால் சென்று, நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துவிட்டார். ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் தீர்மானத்திலேயே நாம் உள்ளோம் என்று கூறினார்.

அதேபோல் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற தீர்மானத்திலேயே இருந்தார். ஆக, இரு தலைவர்களும் ஒரே நிலைப்பாட்டினையே அன்று கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டாட்சியானது, நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டாட்சியில் நம்பகத்தன்மையில்லை, வௌ;வேறு அரசியல் நலன்களைக் கருத்திற்கொண்டே செயற்படுகின்றனர் என்றெல்லாம் கூறக்கூடும்.

ஆனால், அன்று மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிமனிதரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே அனைத்தும் நடைபெற்றன. சமூகத்துக்கு நீதி மறுக்கப்பட்டிருந்தது. இரு கட்சிகள் இணைந்துள்ளமையால், சமூகத்துக்கான நீதி கிடைத்துள்ளது. 

ஜனாதிபதி பதில்:

இக்கேள்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கையில்,

எமது அரசாங்கம், நிலையற்ற தன்மையில் இருக்கின்றது என்ற அவதூறை முன்வைப்பவர்கள், இந்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகத்தையே இழைக்கின்றனர்.

எமது அரசாங்கம், ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளது என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம், அரசாங்கத்துக்குச் சாதகமாக, சகல துறைகளிலும் கிடைத்துவரும் ஒத்துழைப்பை இல்லாதொழிக்கச்செய்வதே அவர்களது நோக்கமாகும். அதாவது, படைவீரர்களைத் துன்புறுத்துவதால், சகல படைவீரர்களும் அரசாங்கத்துடன் கடுப்பாகவே இருக்கின்றார்கள் என்று கூறுகிறார்கள். அன்று, படைத் தளபதியை சித்திரவதைக்கு உள்ளாக்கிச் சிறையில் அடைத்தவர்களே, இன்று நாம் படைவீரர்களைத் துன்புறுத்துவதாகக் கூறுகின்றார்கள்.

அடுத்ததாக, அரசாங்கம் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளது என்று கூறுவதன் மூலம், முதலீட்டாளர்களை முதலீடு செய்வதிலிருந்து தடுப்பதே நோக்கமாகும். அதே போன்று, அரசதுறை, பொலிஸ் ஆகியவற்றைச் செயலிழக்கச் செய்வதே இவர்களது நோக்கமாகும்.

இந்நாட்டின் வாக்காளர்கள் ஆமோதித்து அனுமதி வழங்கியிருப்பதையே, கடந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 95 ஆசனங்களையும் பெற்றுக் கொடுத்ததன் மூலம், இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டையே வாக்காளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆகையால் தான், எந்தத் தரப்புக்கும் 113 ஆசனங்கள் கிடைக்காது போயிற்று. அடுத்ததாக, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, நான்கரை வருடங்கள் பூர்த்தியாகும் வரை, நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தும் வாய்ப்பு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினால் இல்லாது போயுள்ளது.

ஆகவே, நாடாளுமன்றத்தை இன்று கலைக்கமுடியாது. நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமாயின், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்ற தேவை, எவருக்கும் இல்லை என்பதே உண்மையாகும்.

நானும் பிரதமரும் இரு கட்சிகளும், மிகச் சிறந்த புரிந்துணர்வுடனேயே உள்ளோம். ஆகையால், அவர்கள் கூறிவருவதைப் போல் எவ்வித சூழ்ச்சிகளும் இல்லை என்பதை மிகத் தெளிவாக கூறவேண்டும்.

அதிகாரத்தை என்னிடம் தாருங்கள், என்னிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தால் ஒரு மணித்தியாலமும் மக்களை இருளில் இருக்கவிடமாட்டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள். மின்சாரம் போன்ற விடயங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களால் இயங்கவைக்கப்படும் சுயாதீனமான நிறுவனங்களாகும்.

அரசாங்கம் ஸ்திரமற்றிருக்கின்றது எனக் கனவு காண்போரின் கனவானது, ஒரு போதும் நனவாகாது.

கடந்த காலங்களில் அவ்வாறு நடந்துகொண்டிருப்பின் வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல்போதல்கள், வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாவதுமே அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும்.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை முன்வைத்ததன் பின்னர், பல திருத்தங்களைச் செய்ய நேர்ந்ததுடன் பல யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளமை என்பது உண்மையாகும். இதற்கு முன்னர்,  தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த வேளையிலேயே, கடந்த ஆட்சியாளர்கள் தேர்தலை நடாத்துவதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது குற்றப்பத்திரமே என்று குறிப்பிட்டேன் அல்லவா? அதில் உள்ளடங்கிய, எதிர்காலத்தில் வரக்கூடிய பொருளாதாரச் சவால்களுக்கு எப்படி முகங்கொடுப்பது என்பதை அறியாதிருந்தமையும், அந்த அவசரத் தேர்தலுக்கு ஒரு காரணமாகும்.

அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டு, அதில் நாம் வெற்றிகண்டதால், அப்போது அவர்கள் முகங்கொடுக்கவேண்டியிருந்த சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய கடப்பாடு, நம்மையே வந்தடைந்தது. 2016 வரவு-செலவுத் திட்டத்தைக் குறைகூறுபவர்கள், அதிலிருக்கின்ற நாட்டுக்கு மிகவும் சாதகமான விடயங்களை,  கண்டுகொள்வதாயில்லை.

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக அங்கே, பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிச்செல்தற்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், சில மாதங்களுக்கு முன்பாக சீன நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள், எமது நாட்டின் தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்குச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி போன்ற விடயங்கள், ஒரு தனி நாடு என்ற வகையில் எம்மால் தனித்து நின்று சமாளிக்கக் கூடிய விடயங்கள் அல்ல.

மறுபுறத்தில், சர்வதேசச் சந்தைக்கான எமது ஏற்றுமதிகள், ஒரு சதவீதத்தை விடக் குறைவாகவே இருந்துவருகின்றது. இவற்றினால் ஏற்படுகின்ற தாக்கங்களைக் கருத்திற்கொண்டே, வரவு-செலவுத் திட்டத்தில் இரு தடவைகள் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது.

26 வருடங்களுக்கு அதிகமாக யுத்தத்துக்கு  முகம்கொடுத்து வந்திருப்பதுடன், பெரும்பாலும் யுத்தவெற்றி பற்றியே கதைத்தும் வருகின்றோம். அப்படியிருந்த போதும், யுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது பற்றி, இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சரியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின், அதுவே பிரச்சினையாக அமைகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு, யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்விகண்ட போதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் எல்.ரீ.ரீ.ஈ-இன் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். இந்நிலைமையை, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கூறிய எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பதை, துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்.

தனிநாட்டுக்கான கோரிக்கையைச் செயலிழக்கச்செய்ய வேண்டுமாயின், இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாம் எடுத்துவரும் முயற்சிகளைத் தடுக்கவோ, நாம் இந்த நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கின்றோம் என்பவர்களோ, நாட்டைப் பலவீனப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்களோ, மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .