2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘ஊடகத்துறையினால் சிறந்த அரசியல் கலாசாரம் உருவாகும்’

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிறந்த ஊடகத்துறையின் மூலமே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும். சுதந்திர ஊடகத்தின் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் முகாமைத்துவமும், ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

“சிறந்ததொரு தார்மிக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டடத்தொகுதியைத்திறந்துவைக்கும் நிகழ்வில், இன்று (14) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

இந்த நாட்டில் அரச ஊடகங்களை வரலாற்றில் மிக மோசமாகவும் பண்பாடற்ற முறையிலும் பயன்படுத்திய சந்தர்ப்பம்தான், பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் தான் கலந்துகொண்ட சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

“அன்று தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட அவதூறுகள் வேறு எந்தவோர் அரசியல்வாதிக்கு அல்லது ஜனாதிபதி அபேட்சகருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

“வருடா வருடம் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரச ஊடகங்கள் மிக மோசமான நிலையை அடைந்திருந்தது. அத்தகைய மோசமான நிலை எதிர்காலத்தில் ஊடகத்துறைக்கு ஏற்படக்கூடாது. 

“அத்தகைய போலிப் பிரசாரங்களை அன்று தமக்கெதிராக முன்வைத்தமை, ஒரு சிறிய வறிய குடும்பத்தைச் சேர்ந்த நான், பெரும் மனிதர் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சவாலாக இருந்த காரணத்தினாலாகும்” என்றார். 

தான் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டது தனது குடும்பத்தில் எவரையும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது பிரதமர் பதவிக்கோ கொண்டுவருவதற்காக அல்ல என்பதுடன், எதிர்காலத்திலும் அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து நாட்டுக்காவும் மக்களுக்காவும் பெறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கேயாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

தெற்காசியாவின் முதலாவது வர்ணத் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் தொல்பொருள் கூடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .