2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

‘ஒற்றுமையின் அவசியத்தினை உணர்ந்து செயற்படவேண்டிய தருணமிது’

க. அகரன்   / 2017 ஜூலை 13 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து செயற்படவேண்டிய தருணமிது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அண்மைக்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக் காலமாக, இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய தருணமாக கருதப்பட்டு வருகின்றது. தேசிய இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்க கூடியவகையிலான அரசியல் அமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சி இடமபெற்றுவருகின்றது.

சர்வதேசத்தின் உறுதுணையுடன் எமது தீர்வுக்கான வழிவகைகளை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சர்வதேசத்தின் முன்பாக, இலங்கை அரசின் செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மைகளை தோலுரித்துக்காட்டியதன் அடிப்படையில், புதிய அரசமைப்பொன்றை உருவாக்க வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளமை மறுப்பதற்கில்லை.

இந் நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, சர்வதேசத்துக்கு, தமது பலத்தை உறுதிப்பாட்டுடன் காட்டவேண்டிய தேவையுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, காலத்தின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும். குறிப்பாக, மாற்றுத்தலைமை என்ற எண்ணக்கருவை கலைத்து செயற்படவேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்து கால சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட கருத்தியலாக உள்ளது.

எனவே, தமிழர்களின் அரசியல் களத்தில் யாரை உள்வாங்குவது யாரை தலைமையாக ஏற்பது என்பது தொடர்பிலான நிலைப்பாட்டை எடுக்கும் தெளிவு தமிழ் மக்களிடம் உள்ளது. எனவே மக்களின் தீர்ப்பு சரியான தருணத்தில் சரியான முறையில் வெளிப்படுத்தப்படும் என்பதனை உணர்ந்துகொள்ளப்படவேண்டும்.

இந்நிலையில், அரசமைப்பு உருவாக்கத்தில், தென்னிலங்கை சக்திகள் சில குழப்பத்தை ஏற்படுத்தி, தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் இனங்களுக்கான நிம்மதியான எதிர்காலத்தை ஏற்படுத்தத் தடையாக உள்ளனர்.

இவ்வாறான நிலையில், அவர்களின் செயற்பாடுகளை வலுவற்றதாக்கவும் சர்வதேசத்துக்கு, இவ்வாறானவர்களின் முகத்திரைகளை வெளிப்படுத்தவும் ஓரணியில் அரசியல் தலைமைகள்செயற்படுவதே சாலச் சிறந்தது.

இதற்குமப்பால், தென்னிலங்கை கட்சிகள், வடக்கு, கிழக்கில் இன்று காலூன்றி தமது கட்சியின் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தலைமைகள் மீதான அதிருப்தி ஏற்படுமாயின், தென்னிலங்கைக் கட்சிகள் வளர்ச்சியடைவதற்கு காரணமாக அமையும். இவ்வாறான நிலை, தமிழர்களின் எதிர்கால வாழ்வியலையும் அரசியல் ரீதியான முன்வைப்புகளையும் கேள்விக்குட்படுத்தும் என்பதுடன் அரசியல் ரீதியான கோரிக்கைகளும் ஆக்கபூர்வமற்றதாக்கி வடும் என்பது மறுப்பதற்கில்லை.

எனவே, வட மாகாண முதலமைச்சரின் மாற்றுத் தலைமை ஒன்று தேவையற்றது என்ற கருத்தியலோடு ஒன்றிணைந்து தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .