2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கட்டாரிலுள்ள “இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்”

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,  தேவையேற்படின் அவர்களை பதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வெகுவிரைவில் சந்திக்கவுள்ளதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 

“சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் ஆகிய நாடுகள், எகிப்துடன் இணைந்து, வளைகுடா நாடான கட்டாருடன், இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.

இதனடிப்படையில் கட்டார் நாட்டில் இலங்கையை சேர்ந்த அதிகளவிளான இளைஞர், யுவதிகள்  தொழில்புரிந்து வருகின்றனர். குறிப்பாக மலையகத்தைச்  சேர்ந்த இளைஞர் யுவதிகளில் அதிகளவானோர், வீட்டுப் பணியாளர்களாகவும் கட்டட நிர்மாண பணியாளர்களாகவும், வாகன சாரதிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தேவை ஏற்படின் இவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டியது,  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் இ.தொ.காவின் பொதுசெயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மலையக இளைஞர், யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களை தாய் நாட்டிலேயே தக்கவைக்கவும் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

அதாவது சமூகநல அபிவிருத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சானது,  ஆறுமுகன் தொண்டமான் எம்.பியின் பொறுப்பில் இருந்த காலத்தில்,  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மலையக இளைஞர், யுவதிகளுக்கு கோழி குஞ்சு வளர்ப்பு, மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற சுயத்தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி மலையக இளைஞர் யுவதிகளிடம் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தையல் இயந்திரங்கள் மற்றும் சிறியளவிலான கடைகள் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இதேவேளை, மலையக இளைஞர், யுவதிகளில் 50 சதவீதமானவர்கள்,  இலங்கையிலேயே பணிப்புரிவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், பல்பொருட் அங்காடிகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் மலையக இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுப்பதற்காக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளமையை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்நிலையில், கட்டாரிலுள்ள இளைஞர், யுவதிகள் குறிப்பாக மலையக இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் இ.தொ.கா கவனம் செலுத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .