2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

‘கொழும்பு அரசியல் சூடு பிடித்தது’

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், இவ்வாரத்துக்குள் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முக்கிய கூட்டமொன்று ஜனாதிபதி மாளிகையில் இன்று (21) திங்கட்கிழமை கூடவுள்ளது. இதனால், கொழும்பு அரசியல் என்றுமில்லாத வகையில் சூடுபிடித்துள்ளது.  

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்புக்கு படையெடுத்துவிட்டனர்.

அவர்கள், தங்களுடைய கட்சித் தலைவர்களுடன் இரவிரவாக மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.   

இன்று காலை 8:30க்கு ஜனாதிபதி செயலகத்துக்கு சமூகமளிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.   

இன்றைய முக்கிய கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால, அவுஸ்திரேலியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு, நாளை(22) செல்லவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை செல்லவிருக்கின்றார்.    

இவ்வாறான நிலையில், அமைச்சரவையில் இன்றையதினம் மாற்றம் ஏற்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அறுதியாக எதனையும் கூறமுடியாதுள்ளதாக அரசாங்க தரப்பின் மிகமுக்கியமானவர்கள் தெரிவித்தனர்.   

அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில், பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் கடந்தவாரம் மிகமுக்கியமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த முத்தரப்பு சந்திப்பின் போது, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது உசித்தமானது என்ற முடிவு எட்டப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.  

அமைச்சரவையில் இன்றையதினம், மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுமாயின், அது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் முதலாவது மறுசீரமைப்பாகும்.  

அதில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அமைச்சுப்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின், நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பல, பிரதமர் ரணில் விக்கிரசிங்க வகிக்கும் அமைச்சின் கீழ் கொண்டுவந்து, நிதியமைச்சர் பதவியை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்க உள்ளதாக அறியமுடிகின்றது.

மங்கள சமரவீர வகித்த, வெளிவிவகார அமைச்சுப் பதவி, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வழங்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சு பதவிகளை பொறுத்தவரையில், அமைச்சர்களாக மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டோரின் அமைச்சுப்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று அறியமுடிகின்றது.

அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கமானது இன்னும் இரண்டு வருடங்களுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கரு தொடர்பிலான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அமைச்சரவை மறுசீரமைப்புடன், அமைச்சுகள் சிலவற்றின் செயலாளர்கள் நீக்கப்பட்டு, அவ்வமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அதுமட்டுமன்றி, நிறுவனங்களின் தலைவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அலரிமாளிகையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர், பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்,ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எவை எவ்வாறாயினும், அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் இச்செய்தி அச்சுக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .