2021 மார்ச் 04, வியாழக்கிழமை

’சமஷ்டி தேவையில்லை என நான் கூறவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

"பெயர்பலகையில் அல்லது சொற்களில் சமஷ்டியை குறிப்பிடாமல் உள்ளடக்கத்தில் சமஷ்டிக் குணாம்சங்களுடன் கூடிய அர்த்தமுள்ள தீர்வை தமிழ் மக்கள் ஏற்பதற்கு தயாராக உள்ளார்கள். என நான் கூறியிருந்த கருத்தை சமஷ்டி தேவையில்லை என நான் கூறியதாக பல ஊடகங்கள் இன்றைய  தினம் தமது ஊடகங்களில் தலைப்பு செய்திகளை எழுதியுள்ளன. ஆனால் சமஷ்டி தேவையில்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. கூறப்போவதுமில்லை. காரணம் எமது கட்சியின் அடிப்படையான கொள்கையே சமஷ்டி அடிப்படையிலான தீர்வு மட்டுமே. அந்தவகையில் பெயர்பலகை அல்லது சொற்களில் சமஷ்டி தேவையில்லை என கூ றினேனே தவிர சமஷ்டி  தமிழ் மக்களுக்கு தேவையில்லை. என நான் எங்கும் கூறவில்லை" என
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து பருத்தித்துறையில் உள்ள
தனது அலுவலகத்தில் தான் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

"சமஷ்டி அரசமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம் பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சில பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் பல ஊடகங்கள் என்னை கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் அடிப்படைக்கொள்கையே சமஷ்டியாகும். இந்நிலையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லை. என நான் கூறியதாக செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்.

புதிய அரசமைப்பு குறித்து மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் தெற்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் ஏழாவது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது. இது குறித்து தமிழ் மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  காரணம் தமிழ் ஊடகங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இக்கூட்டங்கள் புதிய அரசமைப்பு இந்த நாட்டுக்கு எந்தளவு தூரம் அவசியமா னது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி மக்களுடைய ஆதரவுடன் அதனை வெற்றி பெறச் செய்வதை நோக்கமாக கொண்டது. இதனை பழைய இடதுசாரி கட்சிகள் சில முன்னெடுக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளாக  தமிழ்தேசிய கூட்டமைப்பும்ர மக்கள் விடுதலை முன்னணியும் சில இடங்களில் ஐக்கியதேசிய கட்சியும் பங்களிக்கிறது. இக்கூட்டங்களில் பிரதானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை பேசி வருகிறோம்.

மக்கள் விடுதலை முன்னணி 20ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளபோதும்  தமது முன்னுரிமை புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அது உருவாக்கப்பட்டால் 20ஆவது திருத்தச்சட்டத்தை தாங்கள் கைவிடுவதாகவும் கூறியுள்ளது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தளவில் 20ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆதரித்தாலும் எங்களுடைய கொள்கையின்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமை ஒழிக்கப்படவேண்டும். ஆனால் அது மட்டும் செய்தால் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். அதற்கு புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதனை நாம் கூறுவதுடன் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் நிபுணர்களால் மாதிரி வரைபாக கூறியுள்ள விடயங்களையும்  நாங்கள்கூறியே  வருகிறோம். அதிலும் சமஷ்டி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. அதேபோல் ஒற்றையாட்சி என்ற சொல்லும் இடம்பெற்றிருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை தமிழ் பிரதேசங்களில் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நான் கூறிவந்திருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கான 2 குணாம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது மாதிரி வரைபிலும் உள்ளது. ஆனால், சமஷ்டி என்ற பெயர்பலகை அல்லது சொல்லாடல் இருக்க கூடாது என்பதுடன் புதிய அரசமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாகவும் இருக்ககூடாது. இது எங்களுடைய நிலைப்பாடு.

வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் பண்டா- செல்வா ஒப்பந்தம்,  டட்லி- செல்வா ஒப்பந்தம், 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் வந்த சந்திரிக்கா அம்மையாருடைய தீர்வு திட்டம் உள்ளிட்டவற்றிலும் சமஷ்டி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை. அதேபோல் ஒற்றையாட்சி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை. ஆகவே அந்தமாதிரியான ஒரு ஒழுங் குமுறை ஊடாகவே நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

புதிய அரசமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19ம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில், சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படக்கூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது. எனவே நவீன அரசமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அக்கருத்து இடைக்கால வரைபில் அப்படியே கூறப்பட்டுள்ளது. ஆகவே பெயர்பலகையில் அல்லது சொற்களில் தங்கியிருந்து குழப்பங்களை விளைவிக்காமல் புதிய அரசமைப்பு முயற்சிகளை தோற்கடிக்காமல் இருக்க. நாம் பெயர்பலகை அல்லது சொல்லாடலை தவிர்த்து உள்ளடக்கத்தில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.  இதனை நான் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கும்தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கும் தெளிவாக
கூறிவருகிறேன்.

இரத்தினபுரி பகுதியில் உரையாற்று ம்போது இந்த நாடு ஒரு நாடாக இருக்கவேண்டுமானால்
புதிய அரசமைப்பு தேவை. இது வரை தமிழ் மக்கள் ஒரு நாட்டுக்குள் இணக்கமாக வாழ்வதற்கான இணக்கப்பாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இந்த சமூக ஒப்பந்தம் அவசியமானது. இந்த ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழ்வதற்கான இணைக்கப்பாட்டை நாங்கள் தெரிவிப்பதற்கான நிபந்தனையாக அர்த்தமுள்ள அதிகார பகிர்வு இடம்பெறவேண்டும். என கூறினேன். அதேபோல் காலியில் நடைபெற்ற கூட்டத்திலும் சமஷ்டி குறித்து பல விடயங்களை கூறியிருந்தேன்.

கூட்டத்தின் நிறைவில் என்னுடைய உரையை அடிப்படையாக கொண்டு என்னை நோக்கி விசேடமான கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அக்கேள்வி சமஷ்டியை மட்டும்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என அமைந்திருந்தது. அப்போதும் நான் வழக்கமாக கூறுவதைபோல் சமஷ்டி பெயர்பலகை அல்லது. சொல்லாடல் எமக்கு தேவையில்லை. என்றே கூறினேன். அதனை சமஷ்டி தேவையில்லை. என நான் கூறியதாக ஊடகங்கள் தலைப்பு செய்திகளை
வெளியிட்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கான குணாம்சங்கள் உண்டு நான் சமஷ்டி தேவையில்லை. என எப்போதும் கூறவில்லை"  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .