2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஜனாதிபதி மைத்திரி அதிரடி முடிவு

Editorial   / 2017 மே 31 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, இறக்குமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வாகன இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

இவ்வருட இறுதி வரையிலும், அந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்று, ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற அசாதாரண வானிலையையும், அதனால் ஏற்பட்டுள்ள

அழிவுகளையும் கவனத்தில் கொண்டே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மக்கள் பிரதிநிதிகளுக்காக இவ்வருடம் இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட வாகன இறக்குமதியை இரத்துசெய்யுமாறு, தான் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துவிட்டார் என, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.  

மக்கள் பிரதிநிதிகளுக்கு, புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சர்களின் உத்தியோபூர்வ வாசஸ்தலங்கை திருத்துவதற்கும், நாடாளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த 360 மில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணைக்கு அன்றையதினம் அங்கிகாரம் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முழுமையாக சேதமடைந்த 640 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பகுதியளவில் பாதிக்கப்பட்ட 5,329 வீடுகளையும் திருத்தம் செய்வதற்காக முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.  

மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக அழிவடைந்த வீதிகள், பாடசாலைகள், மின் வழங்கல் கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், அந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். 

குறிப்பாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களுக்கு வெளியே காணிகளை இனங்கண்டு நிர்மாணிப்பதற்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்யவேண்டாம் என்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, எவரும் அத்துமீறிய குடியிருப்பாளர்களாகாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.  

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களும் நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்படும் கொள்ளைத் தீர்மானங்கள் என்பதுடன், எவ்விதத்திலும் அரசியல் நோக்கங்களுக்காகவோ தேர்தலை மையப்படுத்தியோ தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடாதெனவும் தெரிவித்தார். 

கொள்கை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை தேர்தலை இலக்காகக் கொண்டும் அரசியல் நோக்குடனும் மேற்கொள்வதன் மூலம் நாடும் மக்களும் இவ்வாறான ஆபத்தான சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.  

மரணமடைந்த அனைவருக்கும் இழப்பீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்வரை அனர்த்தங்களால் மரணமடைபவர்களுக்கு 15,000 ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போது அத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

மரணமடைந்தவர்களுக்கு வழங்கக்கூடிய விசேட நிவாரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  

இம்முறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் 2003 ஆண்டிலும் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்தனர். இந்த நிலை ஏற்படக்கூடிய பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களை தெளிவுபடுத்துவதற்காக ஆலோசனை வழிகாட்டல் திட்டங்களை அறிமுகப்படுத்தி எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி, அறிவுறுத்தினார். 

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட அனைத்து கற்றல் உபகரணங்களையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தவறவிடப்பட்டுள்ள கல்விச் சான்றிதழ்கள் பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .