2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்மிரர் பத்திரிகைக்கு இன்று 2ஆவது பிறந்தநாள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மிரர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு, இன்று 03ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆரம்பத்தில் இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மிரரின் முதலாவது பத்திரிகைப் பதிப்பு, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி வெளிவந்திருந்தது. ஆரம்பத்தில், சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரரின் வடக்கு - கிழக்குப் பதிப்புடன் இலவசப் பதிப்பாக வெளிவந்த தமிழ்மிரர் பத்திரிகை, நான்கு பக்கங்களைக் கொண்டதாக அமைந்தது.

அவ்வாறு, 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதிவரை தமிழ்மிரர் வெளிவந்தது. பின்னர், புதன்கிழமை தோறும் வெளிவரும் வாராந்தப் பத்திரிகையாக, 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி முதல் வெளிவந்து, அவ்வாண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி முதல், திங்கள் முதல் வெள்ளிவரை, உங்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்மிரர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதைத் தொடர்ந்து, வாசகர்களான உங்களுக்கு, வாய்ப்புகளையும் பரிசுகளையும் வழங்கும் அறிவிப்பொன்றை வெளியிடுவதில், தமிழ்மிரர் மகிழ்ச்சியடைகிறது.
எமது வாசகர்களிடையே எழுத்துத்திறனை ஊக்குவிக்கும்முகமாக, சிறுகதை, கவிதைப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உங்களுக்கு விரும்பிய காலத்து பொருத்தமான தலைப்புகளில், சிறுகதைகளையும் கவிதைகளையும் நீங்கள் அனுப்பி வைக்க முடியும். உங்கள் படைப்புகள், சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டுமென்பதோடு, போட்டிக்கெனப் பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளையும் அனுப்ப முடியும். சிறுகதைகள், அதிகபட்சமாக ஏ-4 தாளில் 4 பக்கங்களாகவோ அல்லது 1,000 சொற்களாகவோ அமைய முடியும். கவிதைகள், அதிகபட்சமாக 150 சொற்களாகவோ அல்லது ஏ-4 தாளில் 2 பக்கங்களாகவோ அமைய முடியும். உங்கள் படைப்புகளை, இவ்வாண்டு மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியும்.

போட்டியின் வெற்றியாளர்கள், தனித்த பத்திரிகையாக தமிழ்மிரர் வெளிவரத் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகவுள்ள மே 20ஆம் திகதி, தமிழ்மிரர் பத்திரிகை வாயிலாக அறிவிக்கப்படுவர். சிறுகதையில் முதலிடம் பெறும் படைப்புக்கு 10,000 ரூபாயும் இரண்டாமிடம் பெறும் படைப்புக்கு 5,000 ரூபாயும் மூன்றாமிடம் பெறும் படைப்புக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும். கவிதையில் முதலிடம் பெறும் படைப்புக்கு 5,000 ரூபாயும் இரண்டாமிடம் பெறும் படைப்புக்கு 3,000 ரூபாயும் மூன்றாமிடம் பெறும் படைப்புக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படும். மேலதிகமாக, சிறுகதைக்கும் கவிதைக்கும், ஆறுதல் பரிசுகளாக, 1,000 ரூபாய் பணப்பரிசுகள் தலா 5 வழங்கப்படும்.

உங்கள் படைப்புகளை, தமிழ்மிரர்,இல. 8, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, கொழும்பு 02 என்ற முகவரிக்கோ அல்லது editor@tamilmirror.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பும் போது, தமிழ்மிரரின் சிறுகதை/கவிதைப் போட்டி என்பதைக் குறிப்பிட்டு அனுப்பவும்.

 


  Comments - 0

  • RAVI Thursday, 03 March 2016 06:49 AM

    I WISH HAPPY 2nd BIRTH DAY.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .