2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘தேர்தலுக்கு முன் நுவரெலியா பிரதேச சபைகள் 2 மடங்குகளாகும்’

Editorial   / 2017 ஜூலை 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இருக்கின்ற 5 பிரதேச சபைகளின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கத்துக்குத்  தெரிவித்து விட்டோம். அதன்படி இது நடைபெறும்” என,  ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன், மேலும் கூறியதாவது,

“இந்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள குடிபெயர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாகாணங்களில் இருந்து புதிய பல பிரதேச சபைகளை அமைத்திட கோரிக்கைகள் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் உடனடியாக செய்திட நடைமுறை சிக்கல்கள் தடையாக உள்ளன.

“எனினும், நாட்டின் சில இடங்களில் 10,000 பேருக்கு ஒரு பிரதேசபை மற்றும் செயலகம் அமைந்திருக்கும்போது, நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச சபைகள் இலட்சக்கணக்காண சனத்தொகையைக்  கொண்டவையாக ஆண்டாண்டு காலமாக அமைந்திருக்கின்றன.

“ஆகவே, இம்மாவட்டம் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும் என்ற எமது சுட்டிகாட்டலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.    

“உண்மையில் நுவரேலியா மாவட்டத்தில் 12க்கு மேற்பட்ட பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துல்ல நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும். அதேவேளை பொகவந்தலாவை, மஸ்கெலிய, அக்கரபத்தனை, பூண்டுலோயா ஆகியவை நகரசபைகளாக  தரமுயர்த்தப்பட வேண்டும். இவையே எங்களது நிலைப்பாடுகள்.

“எனினும், முதற்கட்டமாக 10 பிரதேச சபைகளை பெற்றுக்கொண்டு, இரண்டாம் கட்டமாக பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தவும், புதிய மாநகரசபைகளையும், நகரசபைகளையும் பெற்றுக்கொள்ளவும் தமிழ் முற்போக்கு  கூட்டணி தீர்மானித்துள்ளது.

“இந்த புதிய உள்ளூராட்சி சபைகளுடன் சேர்த்து, சமாந்திரமாக புதிய பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படும்.  

“இந்த புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கமும், அதற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும், மாநகர, நகரசபை தரமுயர்த்தல்களும் மலையகத்தை நோக்கிய அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு நிச்சயமாக வழிகாட்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு  இடமில்லை.

“மலைநாட்டின் புதிய இளந்தலைமுறையை சார்ந்த இளைஞர்கள் பெருவாரியாக இந்த புதிய சபைகளில் அங்கத்துவம் பெற்று, அதன்மூலம் அதிகரித்த நமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய அபிவிருத்தியை நோக்கி மலையக மக்களை அழைத்து செல்ல முடியும் என நாம் நம்புகிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .