2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

'தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும்'

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

'புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது, நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

எல்லோரையும் ஒன்றாக, ஒரே குடையின் கீழ் வைத்து, சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்'  என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகங்கள் தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக மாற்றப்படவேண்டும். இதற்கு மதகுருமார்கள் பாடுபடவேண்டும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் போன்று இனிமேலும் இடம்பெறக்கூடாது. மாணவர்களுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்குவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்துக்கொண்டிருக்கின்றோம்' என்று ஜனாதிபதி கூறினார்.

கிளிநொச்சி, அறிவியல் நகர்ப்பகுதியில், ஜேர்மன் அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தை, நேற்றுத் திங்கட்கிழமை (18) திறந்துவைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'இந்நாட்டில், தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள், சந்தோசமாக வாழ வேண்டும் என்றால், ஏனைய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, தெரிந்து செயற்பட வேண்டும். வடக்கில் உள்ள மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

'வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரிகள், சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் தொடர்பில் அக்கறை செலுத்தாமல் தங்கள் வியாபாரத்தை நோக்காக வைத்துச் செய்கின்றனர்' என கூறினார்.

'நாட்டிலுள்ள சிலர், புதிது புதிதாக சில சில இயக்கங்களை உருவாக்கி வருகின்றார்கள். அது குறித்து, நான் நன்கறிவேன். இந்தப் புதிய இயக்கங்கள் எல்லாம் எதற்காக? என்று நான் அவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். நான் எப்பொழுதும் ஓர் அடி முன்னால் வைப்பேனே தவிர, பின்னால் வைக்கமாட்டேன். எல்லோரும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அவை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில், தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள், சந்தோசமாக வாழ வேண்டும் என்றால், ஏனைய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, தெரிந்து செயற்பட வேண்டும். வடக்கில் உள்ள மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள எல்லா இன மக்கள் மத்தியிலும், ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக, நாம் செய்ய வேண்டிய பல விடயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றின் அடிப்படையில்  செயற்படவேண்டும்.

எனவே, நாட்டை சரியான வழியில்  கொண்டுசெல்ல வேண்டும், சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என்றால், அந்த நாட்டில், நல்ல நேர்மையான  எவ்வித தவறுகளும் செய்யாத நல்ல  தலைவர் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேவை, இன்று இல்லை என்று எண்ணுகிறோம். கடந்த வருடம் ஜனவரி மாதத்துக்குப் பின்னர், நாம் அந்தக் குறையைத் தீர்ப்பதற்கே பொறுப்பை ஏற்றுகொண்டிருக்கின்றோம். எனவே, இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த, நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்ற கலைப்பிரிவுப் பட்டதாரிகள், வேலை இல்லை என்று கூறி, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்கள் வேலையில்லை என்று கூறிக்கொண்டு, இவ்வாறு போராட்டம் நடத்துவதற்கு, நாட்டின் கல்விக் கொள்கையில், கல்வித் திட்டமிடலில் உள்ள தவறே காரணமாகும். இந்தத் தவறை  நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவேதான், தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய கல்வியை வழங்க வேண்;டும். அதற்கு எங்களுடைய கல்விக்கொள்கையிலும் திட்டமிடலிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலைமை அதிகளவில் காணப்படுகின்றது. இதனால், போதைப்பொருள் வியாபாரம் அதிகளவில் நடக்கின்றது. தொழில்வாய்ப்புக்களுக்காக சட்டவிரோத வியாபாரங்களுக்கு அதிகளவானவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால், இளம் சமூகம் சீரழிகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .