2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதாக இல்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை” என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், 144ஆவது நாளாக இன்றும் (13) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இறுதி யுத்தத்தின்போதும் அதற்குப் பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் எந்த தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

“போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைவிட சுகயீனமடைந்து பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் போராட்டத்துக்கு தீர்வு எதையும் அரசாங்கம் வழங்காது வேடிக்கை பார்த்து வருகின்றது.

நாங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இன்று வரையும் தீர்வுகள் எதுவும் இல்லை. இருப்பினும் எமது நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்த்து அரசு உரிய பதிலை வழங்கும் என எதிர்பார்த்துள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழுக்கு, கடந்த மாதம் 12 ஆம் திகதி விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தார்.

இதன்போது, மறுநாள் (ஜூன் மாதம் 13 ஆம் திகதி) கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதன்போது, இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டோரின் விபரங்களை வெளியிடுமாறு முப்படையினருக்கும் நான் உத்தரவிடுவேன். இதற்கமைய வட, கிழக்கு 8 மாவட்டங்களிலும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படாத நிலையில் 144 ஆது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மருதங்கேணி ஆகிய இடங்களில் 100 நாட்களை தாண்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .