2021 ஜனவரி 20, புதன்கிழமை

நிழல் அமைச்சரவை: 'வார்த்தை தவறியது'

Gavitha   / 2016 ஜூலை 11 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நிழல் அமைச்சரவையானது, தவறான வார்த்தைப் பிரயோகத்தாலேயே பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அந்த அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகியதும் அமைச்சரவையும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார்.

வென்னப்புவ, சிறிகம்பளை போதிருக்காராம விகாரையில் , சனிக்கிழமை இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய மஹிந்த, மேற்படி நிழல் அமைச்சரவை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 'இந்த நல்லாட்சி அரசாங்கம், 'வெஸ்மினிஸ்டர்' முறைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதனாலேயே, நாமும் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்தோம். எவ்வாறாயினும், இது எமது கொள்கையுமில்லை. 'நிழல் அமைச்சரவை' என்ற பெயரை, ஒன்றிணைந்த எதிரணியினர், தவறுதலாகவே வைத்துவிட்டனர். தற்போதுள்ள அமைச்சுக்களைக் கண்காணிப்பதெனவே நாம் தீர்மானித்திருந்தோம். அதற்காகவே, ஒன்றிணைந்த எதிரணியிலிருந்த அனைத்து எம்.பிக்களையும் பெயரிட்டோம். அத்துடன், நாம் அமைச்சரவையொன்றை அமைக்கும்போது, 50, 70, 100 என அமைச்சர்களை நியமிக்கவும் மாட்டோம்' என்றார்.
'அதேபோன்று, எமது அமைச்சரவையை நியமிக்கும் போது, அனுபவம், முதிர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். எவ்வாறாயினும், அமைச்சரவையிலிருந்து பிரதமர் விலகும் போது, அமைச்சரவையும் இல்லாமல் போய்விடும். அதனால்தான், நிழல் அமைச்சரவையின் பிரதமர் பதவி எனக்குத் தேவையில்லை என்று கூறினேன். இப்போது அமைச்சரவையும் இல்லை. தற்போது கண்காணிப்புப் பதவிகள் மாத்திரமே உள்ளன' என்றும் மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .