2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

‘பொது நியதிகளின்படி செயற்பட வேண்டும்’

Yuganthini   / 2017 ஜூலை 16 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
“தனிப்பட்ட நியதிகளுக்கு அமைய செயற்படாமல், பொது நியதிகளின்படி செயற்படுவதே பொலிஸாரின் பொறுப்பு” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.   

இலங்கையின் 483ஆவது பொலிஸ் நிலையத்தை, புத்தளம், உடப்பு பிரதேசத்தில் வைபவ ரீதியாகத் திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“பல்வேறு பிரச்சினைகளுடன் பொலிஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுடன், பொலிஸார் அன்போடும் கௌரவத்தோடும் பேசி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதுவே அந்த மக்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது. மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள்.  

“கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினாலும் அநீதியினாலும் பாதிப்புக்குள்ளான மக்கள், இன்று பொலிஸாரின் அசாதாரண செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க தயாராக இல்லை.  

 “எனவே, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது தனிப்பட்ட நியதிகளுக்கு ஏற்ப செயற்படாமல், பொது நியதிகளுக்கு அமைய பணியாற்ற வேண்டும்.  

“இன்று, பொலிஸ் திணைக்களம் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கும் செயற்படாமல் சுதந்திரமாக இயங்கி வருகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்கும் பொலிஸாரை இடமாற்றுவதற்கும் யாருடைய அழுத்தங்களும் எமக்கு கிடையாது.  

“பொலிஸார் தமது சொந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக பொலிஸ் சேவையில் இணையவில்லை. கஷ்டப்பட்ட பொதுமக்களின் பணத்திலிருந்து ஊதியம் பெறும் நாம் அந்த மக்களின் நலன்களுக்காகவே பணியாற்ற வேண்டும்.  

“குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப் பொருள் கடத்தல், விற்பனை செயவோர் என்று பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று வேறு விதத்தில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.   

“ஆனால், எந்த காரணத்தினாலும் எதுவுமே அறியாத அப்பாவி பொதுமக்கள் பாதிப்படையக் ௯டாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.  

“அத்துடன், கிராம மட்டங்களில் பொலிஸ் நடமாடும் சேவைகளை நடத்தி, அதன் மூலம் மக்களின் ௯டுதலான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.  

“அத்தோடு, குறித்த நடமாடும் சேவையின் மூலம் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலை, கலாசாரம், வீதி உள்ளிட்ட அபிவிருத்தி துறைகளிலும் கவனம் செலுத்தப்படவுள்ளன.  

“நாட்டில், நீண்ட காலமாக தலைவிரித்தாடிய தீவிரவாதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இனி ஒருபோதும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை.   

“எம்மிடையே இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் இருக்க ௯டாது. நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .