2026 ஜனவரி 14, புதன்கிழமை

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

Freelancer   / 2026 ஜனவரி 14 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
 
இதன்போது கல்வி சீர்திருத்தங்களின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள், 6ஆம் தர பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தனர்.
 
தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு முறையான பொறிமுறையின் கீழ் இந்த செயற்பாடுகள் அமைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் முன்மொழிந்தன.
 
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் நம்பிக்கையைப் பெறுவது சீர்திருத்தங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
 
அத்துடன், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.
 
ஆனால், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக 6ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி விளக்கமளித்தார்.
 
மேலும் ஸ்மார்ட் பலகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் கணினிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அரசாங்க நிதியிலேயே வழங்கப்படும் என்றும் இதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படாது எனவும் உறுதியளிக்கப்பட்டது.
 
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் உள்ள சவால்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. (a)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .