2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'மைத்திரியுடன் இருந்த என் மகள் எங்கே?':ஆணைக்குழுவிடம் தாய் கதறல்

Gavitha   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதைய வேட்பாளராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரச் சுவரொட்டிகளில், தனது மகளும் இருக்கும் புகைப்படங்கள்  வெளியாகின. அது என் மகள்தான், அந்த மகளை மீட்டுத் தாருங்கள்' என்று காணாமற்போயுள்ள காசிப்பிளை ஜெரோமி என்ற யுவதியின் தாயாரான காசிப்பிள்ளை வனஜா, காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

'இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவச் சீருடை அணிந்து வந்த ஆயுதம் தரித்த இளைஞர் குழுவொன்று, இளம் பிள்ளைகளைப் பிடித்தார்கள். அவர்கள் யார் என்பதனை என்னால் ஊகிக்கமுடியவில்லை.

எனது மகளான காசிப்பிளை ஜெரோமியை அணைத்துப் பிடித்திருந்தபோது, என்னைத் தாக்கிவிட்டு, எனது பிள்ளையை அவர்கள் பிடித்துச் சென்றார்கள். அப்பிரதேசம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், இராணுவம் அப்பகுதியில் முன்னேறிக்கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதிலொன்றில், அவருடன் எனது மகளும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருப்பதை அவதானித்தேன்.  ஜனாதிபதி, யாழ்ப்பாணம் வந்தபோது நான், அவரிடம் படத்தைக் காட்டி கேட்டேன். அவர் அப்படத்தை தனது மடியில் வைத்துப் பார்த்து விட்டு தடுமாறிவிட்டார். கடந்த 8ஆம் மாதம் நான் அவரை மீண்டும் சந்தித்து வினவிய போது, காணாமல் போனோர்  தொடர்பான தன்னால் எதையும் செய்ய முடியாது. இது தொடர்பாக விசாரணை செய்து அறிவிக்கிறேன் என்று கூறினார்' என்று அத்தாய் கூறினார்.

இதனையடுத்து, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, சுவரொட்டியையும் மேலதிக ஆவணங்களையம் பார்வையிட்டதுடன், அவற்றின் பிரதிகளை, காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யவுள்ள குழுவிடம் கையளிப்பதாகவும் அவர்கள் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .