2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக விவகாரம்: இனவாதத் தூண்டுதல்

Gavitha   / 2016 ஜூலை 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'இனவாதிகளும் சில அரசியல்வாதிகளுமே, இனவாதத்தினால் குளிர்காய்வதற்கு முயல்கின்றனர். அப்பாவிப் பொதுமக்களுக்கு அந்தத் தேவையே இல்லை' என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி, 'யாழ். பல்கலைக்கழக விவகாரம், இனவாதத் தூண்டுதலாகும்' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முக்கிய காரணம், இனவாதத்தின் தூண்டுதலேயாகும்.

இதனை முறியடித்து, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்றும் ஜே.வி.பி கேட்டுக் கொண்டுள்ளது.

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,'கடந்த முப்பது ஆண்டுகளாக இனவாதத்தினால், இந்த மண்ணில் இரத்தக்கறை படிந்தது. அந்த இனவாதத்தின் சாயலானது, இன்னமும் மறைந்து விடவில்லை.

அதன் ஒரு வெளிப்பாடே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையில் ஏற்பட்ட முரண்பாடாகும்.

ஓர் இனத்தைத் தாழ்த்துவதனால், மற்றைய இனம் உயர்வடைந்து விடாது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமே, இனங்களை உயர்த்திடும். அரசியல்வாதிகள் என்றாலும் சரி, ஊடகவியலாளர்கள் என்றாலும் சரி,  இனவாதிகளின் சார்பில் நின்று பணியாற்றாதீர்கள். மக்களின் நலனுக்கு ஏற்றாற் போல் செயற்படுங்கள்' என்றார்.

இதேவேளை, தங்களது உரிமைகள் மற்றும் சலுகைகள் மறுக்கப்படுகின்றவிடத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அம்மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அவற்றுக்கு உயர்கல்வி அமைச்சரே பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலிருந்தே பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றமை, சிறைக்குள் தள்ளப்படுகின்றமை போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்த அநுர குமார எம்.பி,
அவற்றை எதிர்த்தே கடந்த ஜனவரி 8ஆம் திகதியன்று நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்த அரசாங்கமும், அதே செயற்பாட்டினையே மேற்கொள்கின்றது எனக் குற்றஞ்சாட்டிய அவர், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு ஒருமாதத்துக்குள்ளேயே, உயர் தேசிய டிப்ளோமா (எச்.என்.டி) மாணவர்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும், மாணவர்கள் வீதிக்கு இறங்குவதற்கு ஆட்சியாளர்களே காரணமாக அமைந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

'உயர்தரம் வரையில் சீரான கல்வியினைப் பெற்றுக்கொண்ட அவர்களால், பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கு கற்றலுக்கு ஏற்றவகையிலான, பௌதீக மற்றும் மனித வளத்தில் உள்ள குறைபாடே, அவர்கள் வீதிக்கிறங்கிப் போராடக் காரணமாக அமைந்துள்ளது. அதனைச் சீராக அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக வகுப்புத்தடை, கைதுகள், மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், வழக்குப் பதிவு என்பன மேற்கொள்ளப்படுகின்றதுன. இது, மாணவர்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல, இது முழு இலங்கையருக்குமான பிரச்சினை. நாளை மக்கள், தங்களது  பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எதிராக வீதிக்கிறங்கினாலும், இதே தாக்குதல் தான் மேற்கொள்ளப்படும்' என அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஷவினால், தேசியக் கட்சியொன்று புதிதாக உருவாக்கப்படவுள்ளது என்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், 'தேசியக் கட்சி ஒன்றை உருவாக்கப் போவதாக, பசில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். அவர் உண்மையில் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்?' என்று வினவினார்.

'„இன்டபோர்லினால்... (சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பு), எமது நாட்டு குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டவரே பசில் ராஜபக்ஷ ஆவார். அவர், 2004ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டில் இருக்கவில்லை. அவர், அமெரிக்காவிலேயே இருந்தார். 2004ஆம் ஆண்டு, தேசியப் பட்டியலின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இன்று, தேசியக்கட்சியை ஆரம்பிக்கப்போவதாக கொக்கரிக்கிறார். இவ்வாறானவர்களுக்கு, நாட்டை கைவிட்டுவிடக்கூடாது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுமாயின், அது நாட்டின் அழிவுக்கே வித்திடும்' என்றார்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .