2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வாய்ச்சண்டையால் அவை அதிர்ந்தது

Kanagaraj   / 2016 மார்ச் 08 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அவை, சில நிடங்கள் அதிர்ந்தது.

இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன,

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமற்போயுள்ளனர் என்றும் அவர்களில் பலர், ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றார்.

அவரது, அந்த கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம். ஏ. சுமந்திரன் கடும் ஆட்சேபணை தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தினேஷ் எம்.பி,  காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து போலியானது. பரணகம ஆணைக்குழுவின் பிரகாரம் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் குறைவானது. அவர்களிலும் பலர், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். புலிகளால் கடத்தப்பட்டவர்களே காணாமல்போயுள்ளனர் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டார். சுமந்திரன் எம்.பியின் ஒலிவாங்கி முடுக்கிவிடப்படவில்லை. எனினும், தினேஷ் குணவர்தனவுடன் கடுஞ் சீற்றத்துடன் தர்க்கித்தார்.

ஒரு கணத்தில் கடும் கோபமடைந்த தினேஷ் எம்.பி, 'புலிகளுக்காகச் செயற்பட்டவர்களுக்கு, செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாதுதான் என்றார். இதன்போது,  எம்.பிக்களான சிசிர ஜயக்கொடியும், பிரசன்ன ரணதுங்கவும் தினேஷுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர்.

இதன்போது எழுந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் சிலர், இனவாதம் பேச வேண்டாம், இனவாதம் பேசவேண்டாமென கோஷமெழுப்பினர்.

இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஏதோவொன்றைக் கூற, 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமற்போயுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என தினேஷ் எம்.பி. சுட்டிக்காட்ட, அதனை மறுதலித்த அமைச்சர் மங்கள, தினேஷின் கூற்றுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். தான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தனது தொனியை உயர்த்திய தினேஷ் எம்.பி,  'மங்கள சமரவீர, நாட்டைக்காட்டிக்கொடுத்த வெளிவிவகார அமைச்சர்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--