2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

விவசாய சமூகத்தின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தி

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது விவசாய சமூகத்தின் மிக நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மட்டுமன்றி தமது தனிப்பட்ட கனவு நனவாகும் ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மொரகஹகந்த - களுகங்கை கருத்திட்ட நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான அணைக்கட்டை நிர்மாணிப்பதற்கான புதையல் பிரதிஷ்டை செய்யும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் மொரகஹகந்தையில் இடம்பெற்றது.
 
2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம், 2012ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவிருந்தபோதும் அப்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களின் ஆர்வமின்மை காரணமாக அது நிறைவுபெறவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
இக்கருத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2018ஆம் ஆண்டு அது நிறைவுபெறுகின்றபோது தாம் இதைவிட பலமடங்கு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

தாம் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக இருந்தபோது முதலாவது சாத்தியவள அறிக்கையை எப்படி ஆரம்பித்தார் என்றும் பின்னர் மகாவலி அமைச்சர் என்றவகையில் இக்கருத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டியதையும் இக்கருத்திட்டத்துக்காக அடிக்கல் நாட்டியதன் பின்னர் சில நாட்களில் தாம் அந்த அமைச்சுப் பொறுப்பிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டார் என்பதையும் ஜனாதிபதி இதன்போது விபரித்தார். இக்கருத்திட்டத்துக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட காரணத்தினால் அவ்வமைச்சுப் பொறுப்பை தாம் மீண்டும் வாதாடிப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தபோதும் இக்கருத்திட்டத்துக்கு நிதியளிப்பதற்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
 
2015ஆம் ஆண்டு அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படுகின்றபோது தாம் மகாவலி அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பை தம்மிடம் வைத்துக்கொள்ள விரும்பியதற்கான காரணம் தமது காலப்பகுதியில் இந்த மொரகஹகந்த - களுகங்கை  நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தை நிறைவு செய்ய விரும்பியமையாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பொருளாதாரத்தின் உயிர்நாடி விவசாயமாகும் என்றும் பராக்கிரம சமுத்திரத்தைப் பார்க்கிலும் ஆறுமடங்கு கொள்ளளவைக்கொண்ட இதன் நீர்த்தேக்கத்துடன் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என்பதோடு, விவசாய சமூகத்தின் பொருளாதாரத்துக்கும் இது உந்துசக்தியாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எத்தகைய சவால்கள் வந்தபோதும் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை ஒருபோதும் பின்நோக்கி கொண்டுசெல்லப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்திக்காக தாம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
விவசாய சமூகம் உள்ளிட்ட எல்லா மக்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாளைய தலைமுறைக்காகவும் ஒரு சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர்  பி.பீ. அபேகோன், அரசாங்க அதிகாரிகள், சீன நாட்டின் தூதுவர் உள்ளிட்ட தேசிய மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X