2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

13 ஐ ஆதரித்து கிழக்கில் இன்று மு.கா பிரேரணை

Kogilavani   / 2013 ஜூலை 22 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தும் 13 ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் கிழக்கு மாகாண சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று செவ்வாய்க்கிழமை பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கி விடுவதற்கோ அதன் அதிகார வலுவை குறைப்பதற்கோ முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இணங்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மேலும் கூறியதாவது,

முஸ்லிம்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அவசியம் மிகவும் உணரப்பட்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இக்கட்சி எந்த சக்திக்கும் விட்டுக் கொடுக்காமலும் அஞ்சாமலும் சமூகப் பற்றுடன் துணிச்சலுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கிறது.

இந்த இக்கட்டான தருணத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக இது விடயத்தில் நாம் வாய் மூடி மௌனிகளாக இருப்போமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற சமூக இயக்கம் முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத ஒரு விடயமாகவே மாறி விடும் என்பதை மறுதலிக்க முடியாது.

அந்த வகையில் இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளக் கூடியதும் சமூக ரீதியான காப்பீடுகளை தரவல்லதுமான அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு பேரினவாத சக்திகள் குரல் எழுப்பிக் கொண்டு- அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்ற இச்சூழ்நிலையில் அவற்றை முறியடிப்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றன.

அதுபோன்று ஏனைய முஸ்லிம் தலைமைகளும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் 13ஆவது திருத்த சட்டத்தை பாதுகாத்து சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான பிரேரணைகள் சில மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையிலும் அவ்வாறன பிரேரணை ஒன்று கொண்டு வரப்படலாம். அதன்போது முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்து- அம்மசோதாவை தோற்கடிப்போம்.

எவ்வாறாயினும் அப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டாலும் சமர்ப்பிக்கப் படாவிட்டாலும் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் 23ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எமது தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் நான் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன்' என்று குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--