2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தமிழ்ச் செம்மொழி விழா கோலாகலமாக ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் சுவாமி விபுலானந்தர் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ்ச் செம்மொழி விழா இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.



இவ்விழாவில் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஊர்வலப் பவனியொன்று இடம்பெற்றது. இப்பவனி பெரிய நீலாவனையிலிருந்து காரைதீவு வரை இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

தமிழ்ச் செம்மொழி விழாவினை முன்னிட்டு பெரியநீலாவணை முதல் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வரையான வீதிகள் வாழை மரங்களாலும் தென்னை ஓலைகளினாலும் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற நிறங்களிலான கொடிகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
 
ஊர்வலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன், புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் எ.அறிவுநம்பி, பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.இஸ்மாயில், முனைவர் இ.வெங்கடேசன்(சிங்கப்பூர்), கிழக்கு மாகாண பிரதிக் கல்விச் செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ச் செம்மொழி விழாவிற்கு தமிழர்களும் முஸ்லிம்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்ததானது தமிழ், முஸ்லிம் உறவைப் மேலும் பலப்படுத்துவதாக இருந்தது.

தமிழர்களும் முஸ்லிம்களும் நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவில் கலந்து கொண்டமை எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

தமிழ்ச் செம்மொழி விழாவில்  படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளியிடப்பட்டதுடன், 2010 தமிழ் மொழித்தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் ஊர்திகள் வந்து கொண்டிருப்பதனையும் அதிதிகள் ஊர்வலமாக வருவதனையும் வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருப்பதனையும் விழாவினை ஆரம்பித்து வைத்து குத்து விளக்கேற்றுவதனையும் அதிதிகள் அமர்ந்து இருப்பதனையும் படங்களில் காணலாம்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .