2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு; இலங்கை அரசு காலம் தாழ்த்துகிறது-இந்திய கம்யூ . கட்சி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம், நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் நிவாரண உதவிக்காகவும் இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய 500 கோடி ரூபா நிதி, இதுவரையில் செலவிடப்படாமல் இருப்பதாகவும் அந்த நிதியை இலங்கை அரசு வேறு நோக்கங்களுக்கு திருப்பி விடுகிறதா என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

லோக்சபாவில் நேற்று இலங்கை விவகாரம் குறித்து விவாதித்த போதே லிங்கம் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்பி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வந்த போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அந்த முகாம்களிலேயே  அடைபட்டுள்ளனர்.

அம்மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்னமும் செய்துகொடுக்கப்படவில்லை. அத்துடன், அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கை தொடங்க போதிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் இந்தியா அனுப்பிய நிவாரண உதவிகள் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. எனவே அந்த உதவிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் என்னென்ன பிரச்சினைகளுடன் காலம் தள்ளுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பி அறியவேண்டும்.

இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த நிலைக்குழு உறுப்பினர்களாகவோ அல்லது மக்களவைத் தலைவரால் நியமிக்கப்படுபவர்களாகவோ இருக்கலாம், என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X