2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினரின் குரலை நசுக்கும் செயல்:மாகாண சபை உறுப்பினர்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ள உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினரின் குரலை நசுக்கும் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதும் அல்லது ஆதரவாக வாக்களிக்காமல் இருப்பதும் ஒன்றே என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண சபையால் கூட்டப்பட்டுள்ள விசேட கூட்டமொன்றில் இத்திருத்தச் சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது எனவும் ஜவாத் தெரிவித்தார்.

"கிழக்கு மாகாண சபையின் கூட்டம் இம்மாதம் 26ஆம் திகதியே நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. பின்னர் அது 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு மீண்டும் 26ஆம் திகதி மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாகாண சபை கூட்டமொன்றுக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். எனினும் இக்கூட்டத்திற்கான அழைப்பு தொலைபேசி மூலமே விடுக்கப்பட்டது. அத்துடன் இதுவரை கூட்ட நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படவுமில்லை.

இச்சட்ட மூலம் தொடர்பான பிரதிகள் எதுவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் எவ்வாறு நாங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் எவ்வாறு இது தொடர்பில் விவாதிக்க முடியும்?" என மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் விசேட கூட்டமொன்றில் விசேட பிரரேனையை வாக்கெடுப்புக்கு விட முடியாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

"கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் மாகாண சபை உறுப்பினர்களின் சொந்த விலாசத்திற்கு தபால் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே 19ஆம் திகதியே இந்த மாதத்திற்கான சபைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானித்திருந்தோம். எனினும் பின்னர் 26ஆம் திகதியாக மாற்றப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த சட்ட மூலத்தை 10 நாட்களுக்குள் சமர்பிக்குமாறு தெரிவித்ததிற்கிணங்கவே விசேட கூட்டம் கூட்டப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி கோரும் போது மறுக்க முடியுமா? என தவிசாளர் பாயிஸ் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை "மாகாண சபை விவாதங்களின் போது தமது கட்சியின் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆதரவாக வாக்களிப்போம். ஏற்றுக்கொள்ளாத விடத்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமாட்டோம்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி  தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .