2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது அரசியல் தீர்வை தவிர்ப்பதற்கான அம்புலி மாமா கதை: மனோ கணேசன்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியல் தீர்வை தராமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் 'அம்புலி மாமா' கதைத்தான் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையின்மை என்பதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக அரசியல் தீர்வுகான முடியாதுள்ளது என ஜனாதிபதி கூறியது தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
போருக்கு முன்னரும், போரின் போதும் 'பயங்கரவாதத்தை' காரணங்காட்டி அரசியல் தீர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று போர் முடிந்த பின்னர் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது என்ற காரணத்தை கண்டுபிடித்து காட்டி அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது. இது அம்புலி மாமா புத்தகத்தில் வரும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் விக்ரமாதித்தன் கதையை நினைவுப்படுத்துகின்றது.
 
ஜனாதிபதியே நியமித்த சர்வக்கட்சி மாநாட்டின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டன. அதேபோல் இன்றைய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் பல்லாண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையை காரணங்காட்டுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
 
ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு இந்தியாவிலும் எதிரொலி கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வரும், இந்திய மத்திய  அரசு தலைவர்களும் அரசியல் தீர்வை வலியுறுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக விமர்சனம் செய்கின்றார்கள். ஆனால் இந்த அக்கறையும், அவசரமும் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்வக்கட்சி உடன்பாடுகளையும் 13ஆவது திருத்தத்தையும் அமுல்படுத்துவதில் கிஞ்சித்தும் காட்டப்படவில்லை.
 
போர் காலகட்டத்தில் இலங்கை அரசிற்கு உறுதுணையாக தமிழக அரசும், இந்திய அரசும் இருந்தது அனைவரும் அறிந்த பகிரங்க உண்மையாகும். இந்த துணையிருப்பிற்கு நிபந்தனையாக அரசியல் தீர்வை போர் முடிந்தவுடன் நடைமுறை படுத்துவோம் என இலங்கை அரசு உறுதியளித்திருந்ததும் பகிரங்க உண்மையாகும். ஜனாதிபதி 13ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக தீர்வை பெற்றுத்தருவதாக இந்திய ஊடகங்களுக்கு பலமுறை கூறியிருந்தார். ஜனாதிபதியின் நண்பரான பிரபல இந்திய ஊடகவியலாளர் இந்து ராம்  தனது பத்திரிக்கையில் 13இற்கு மேற்செல்லும் தீர்வு பற்றி பலமுறை எழுதியிருந்தார். இன்று அதே இந்து ராம் தனது பத்திரிக்கையில் அரசியல் தீர்வில் தொடர்பிலான இலங்கை அரசின் அக்கறையின்மை சம்பந்தமாக எழுதுமளவிற்கு நிலைமை முற்றியுள்ளது.
 
எனவே இன்று தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை பற்றி ஜனாதிபதி கருத்து தெரிவிப்பது வேடிக்கையானதாகும். அப்படியே பார்த்தாலும்கூட வடக்கு கிழக்கிலே தமிழ் கட்சிகள் மத்தியில் அரசாங்கம் நினைப்பதை போல் பாரிய ஒற்றுமையின்மை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்ற பல கட்சிகளின் கூட்டமைப்பாக இருக்கின்றது. அதேவேளையில் மூன்று ஆசனங்களை பெற்ற ஈ.பி.டி.பியுடன் கூட்டு சேர்ந்துள்ள இன்னும் பல கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கமாக செயற்படுகின்றன.

ஆக இந்த இரண்டு அணிகள் தான் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயும் அரசியல் தீர்வு தொடர்பாக பாரிய வேறுபாடுகள் இருப்பதாக தோன்றவில்லை. குறிப்பாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது சம்பந்தமாக ஒத்த கருத்து நிலவுவதாகவே நாம் நம்புகின்றோம்.
 
எனவே அரசியல் தீர்வு கொண்டுவருவதில் தமக்கு உடன்பாடு இருக்குமானால் அதை அரசாங்கம் உடனடியாக அறிவிக்கவேண்டும். அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்பாடு  இல்லாவிட்டால், அதையும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உலகம் அறிந்துகொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தும்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .