2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை தீர்மானத்தால் தமிழர்கள் தேசிய கீதத்தை பகிஸ்கரிக்க நேரிடும்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருக்குமாயின் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை ஒரு கலாச்சார படுகொலைக்குள் தள்ளுகின்ற நிகழ்ச்சியாகவே தோற்றமளிக்கின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த கோவில்களை கட்டி வருகின்ற நிலையிலும் தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இது மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலக்கட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணிக்கும் செயலாகவே பார்க்கக் கூடியதாய் உள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை ஒரு கலாச்சார படுகொலைக்குள் தள்ளுகின்ற நிகழ்ச்சியாகவே தோற்றமளிக்கின்றது.

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3இல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும்.

1956ஆம் ஆண்டு  கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.
 
இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம்.

அமைச்சரவையில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை மேற்கொண்ட போது வெளிநாடுகளில் தேசிய கீதங்கள் ஒரு மொழியில் மட்டுமே உள்ளதாகவும் இந்தியாவில் ஹிந்தி மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் விமல் வீரவன்ச உட்பட அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

உண்மையில் அவர்களுக்கு உலக நடப்புக்கள் குறித்த தெளிவு எதுவும் இல்லை என்பதால் சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம், இந்திய தேசிய கீதம் ஹிந்தி மொழியில் எழுதப்படவில்லை. அதனை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். அவர் இந்தியாவின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான வங்காள இனத்தினைச் சேர்ந்தவராவார்.

அவர் எழுதிய வங்காளி மொழியிலேயே இந்திய தேசிய கீதம் உள்ளதையும், இந்தியாவின் முதன்மை மொழிகள் பல இருக்கும் நிலையில் சிறுபான்மை இனம் ஒன்றிற்குச் சொந்தமான மொழி ஒன்றிலேயே அங்கு தேசிய கீதம் இசைக்கப்படுவதையும் அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை கனடாவில் மூன்று மொழிகளிலும் சுவிட்ஸலாந்தில் நான்கு மொழிகளிலும் தென் ஆபிரிக்காவில் ஐந்து மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. சரியான காரணங்கள் இன்றி பொருத்தமற்ற நேரத்தில் இனவாத நோக்கில் தேசிய கீதத்தினை சிங்களத்தில் இசைக்க சொல்வதானது தமிழ் பகுதிகளை சிங்கள மயப்படுத்த எடுக்கும் தமிழருக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இந்நடவடிக்கையானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையையோ புரிந்துணர்வையோ கொண்டு வரமாட்டாது என்பதுடன் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்களை குழப்பங்களை தொடர்ச்சியாக வைத்திருக்கவே இது உதவும் என்ற காரணத்தாலும் இந்நடவடிக்கையினை உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது" என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0

  • bala Wednesday, 15 December 2010 07:23 AM

    தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட இவ்வறிக்கை பாரட்டுவதக்குரியது. மற்றைய தரப்பின் புரிந்துணர்வை மேம்படுத்தும்.well done.thank you for the effort. அரசின் பதில் உங்கள் அறிக்கையின் தரத்தை வெளிப்படுத்தும். அரச தரப்பின் பொறுப்பற்ற வாதங்களுக்கு பொறுமையுடன் பதில் அளியுங்கள். மக்கள் உங்களைத் தெரிவு செய்தமைக்கு மகிழ்வார்கள்.மறுபடியும் மனமார்ந்த நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--