2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வித்தியாதரன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கப்பூர், மலேசியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை பண்டாரநாயக்க விமானநிலையத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதாக வித்தியாதரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் வித்தியாதரன் மேலும் குறிப்பிடுகையில்...

'சிங்கப்பூர், மலேசியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுவிட்டு நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறிய தேசிய புலனாய்வு பிரிவினர் என்னை அழைத்துச் சென்றனர். சுமார் 3 மணித்தியாலங்கள் நாகரிகமான முறையில் என்னை பல கோணங்களில் விசாரித்தனர். பத்திரிகை துறையிலிருந்து ஒதுக்கியிருக்கும் என்னை எதற்காக விசாரிக்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் உங்கள் பெயர் எமது தரவில் இருக்கிறது. அதனால்தான் விசாரிக்கிறோம் என்று கூறினர்.

அரசியலில் ஈடுபடப்போகிறீர்களா?, எதற்காக சிங்கப்பூர், மலேசியா போனீர்கள்?, இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? போன்ற பல கேள்விகளை என்னிடம் கேட்டவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வெளியில் செல்ல அனுமதித்தனர்..'

பத்திரிகை துறையிலிருந்து கடந்த மே மாதத்துடன் ஓய்வுபெற்ற மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், தமிழ்மிரர் இணையத்தளத்தில் வாராவாரம் 'அரசியல் அலசல்' என்னும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .