2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சீரற்ற காலநிலையால் கிழக்கு, மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி, சுவர்ணஸ்ரீ, எம்.சீ.ரிஃபாத்)

கிழக்கு, மத்திய, வட மத்திய, மற்றும் வட மேல் மாகாணங்களில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை கல்வி மாவட்டம் உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் நாளை மறுநாள் செவ்வாய்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, அம்பாறை  கல்வி மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு விடுமுறை தேவைப்படின் வலயக்கல்வி பணிப்பாளர்கள் அதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்துக்குட்பட்ட நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்படைந்துள்ளது. சில பிரதேசங்களில் போக்குவரத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை 10ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத் தமிழ்க்கல்வியமைச்சர் அனுஸியா சிவராஜா தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பெய்துவரும் அடைமழையினால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி கிழக்கு மாகாணத்துக்குட்பட்ட மட்டக்களப்பு மற்றும் கல்முனை கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் தெரிவித்தார்.

இத்தீர்மானம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் அறிவுறுத்தலுக்கினங்கவே எடுக்கப்பட்டதாகவும் விடுமுறை வழங்கப்படும் பாடசாலை நாட்களுக்கான மாற்றீடு நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X