Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 01 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கெம்பல் மைதானத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தது.
'மலையகத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை அதிகரி', 'பொருட்களின் விலையை உடனடியாகக் குறைப்பதாக பொய் சொல்ல வேண்டாம்', 'வரிகளை இரத்துச் செய்', 'அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறை' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா,
'பொருட்களின் விலை உயர்வடைந்து செல்கிறது. வேலை வாய்ப்புக்கள் இல்லை. மக்கள் மூன்று வேளைகளிலும் மரக்கறிகளுடன் சாப்பிட முடியாது திண்டாடுகின்றனர். கிழங்கும் சோறும் மாத்திரமே மக்கள் சாப்பிடுகின்றனர். அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இவ்வாறானதொரு அரசாங்கம் நாட்டுக்கு தேவையில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது' என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் இங்கு உரையாற்றுகையில்,
'நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வடைந்து செல்கிறது. பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில், பொருட்களின் விலைகளை குறைக்குமாறும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், இதற்கு அடுத்த கட்டமாக நாட்டிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி மற்றுமொரு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, இராமலிங்கம் சந்திரசேகரன், அநுரகுமார திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய், நெற்கதிர் கொத்துகள், கூடையில் மரக்கறி போன்றவற்றின் மாதிரி உருவங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
43 minute ago