2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தூத்துக்குடி – கொழும்பு கப்பல் சேவை; கன்னிப் பயணம் இன்று ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் சேவையின் கன்னிப் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள 'ஸ்கோஷியா பிறின்ஸ்' என்னும் இந்தியக் கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இன்று மாலை தூத்துக்குடியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த கப்பல் 280 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலங்கைக்கான பயணத்தை 14 மணித்தியாலங்களில் பூர்த்தி செய்யும் என இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கூறியது.

இந்நிலையில், நாளை காலை 7.30 மணிக்கு குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தக் கப்பல் கொழும்பிலிருந்த தூத்துக்குடிக்கான தனது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இந்தக் கப்பல் மூலமான பயணத்துக்கு ஒரு பயணியிடமிருந்து தலா 60 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தினை வழமையான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

1,044 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 9 தட்டுகள் உள்ளன. இதில் உணவுச் சாலைகள், மருத்துவ வசதிகள் என்பன இருக்கின்றன என கப்பல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஏ.டி.கே.சந்திரதாஸ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கப்பல் சேவைக்கென ஒரு கப்பலை வாங்கும் முயற்சியில் கப்பல் கூட்டுத்தாபனம் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு கப்பல் வாங்கிய பின்னர் வாரம் இரண்டு சேவைகளை நடத்த தீர்மானித்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .