2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மூன்று கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசிடம் த.தே.கூ. வலியுறுத்து

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகள், சிங்கள மக்களை செறிவாகக் கொண்ட வெலிஓயாவை முல்லைத்தீவுடன் இணைத்தல் மற்றும் சிங்கள அரசாங்க அதிபர் ஒருவரை மன்னாருக்கு  நியமிக்கும்  திட்டம் ஆகியனவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என  அரசாங்கத்தரப்புடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய மூன்று அடிப்படை நிபந்தனைகள் இவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இக்கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அரசாங்கத்தூதுக்குழுவினர் இணங்கியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி விரும்பினால் இவ்விடயங்களை சில மணித்தியாலங்களில் அவர் நிறுத்த முடியும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். சம்பூர் போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இப்பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்தரப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் பங்குபற்றினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுரேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எம்.பிகளும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் பங்குபற்றினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--