2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத்தில் ரணிலின் அறிக்கைக்கு அனுமதி மறுப்பு; கழுத்துப்பட்டியை கழற்றி ரணில் ஆட்சேபம்

Super User   / 2011 நவம்பர் 29 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

 

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் 23-11 ஆவது பிரிவின்கீழ் அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவதற்கு தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை  என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட தனது கழுத்துப்பட்டியை (டை) கழற்றிக்கொண்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்க உரையாற்ற எழுந்தபோது அவர் நீதிமன்றித்தின் முன்னாலுள்ள  விடயமொன்றைப் பற்றி பேசுவதாக சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

'ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கை எனது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் சில பந்திகள் நீதித்துறையின் கீழ் வரும் விடயமாகும். நீதிமன்ற வழக்கு விடயமொன்றும் அதில் உள்ளது. இவ்விடயம் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.  நீதிமன்றத்தின் முன்னாலுள்ள விடயம் பற்றி நாம் விவாதிக்க முடியாது' என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

அப்போது, குறித்த பந்திகளை நீக்கிவிட்டு தான் அறிக்கையை வாசிப்பதாக ரணில் கூறினார்.

ஆனால் அவ்வறிக்கையின் ஒவ்வொரு பந்தியும் ஒன்றுடனொன்று தொடர்புள்ளவை எனவும் அதனால் சர்ச்சைக்குரிய அப்பந்திகளை நீக்கினாலும் அறிக்கையை அனுமதிக்க முடியாது எனவும் அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

அவ்வறிக்கையை மீள தயாரித்து மற்றொரு தினத்தில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .