2021 ஜனவரி 20, புதன்கிழமை

என் மனம் சங்கடத்துக்குள்ளானது: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஏழாவது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அவர் சம்பிரதாயபூர்வமான வரவு – செலவுத் திட்ட பெட்டகத்தில் கொண்டுவராது முன்மொழிவுகளை கோவையிலேயே கொண்டுவந்தார். அவரது உரை இரண்டு மணித்தியாலங்களும் 36 நிமிடங்களும் நீடித்தன.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12.52 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவைக்கு பிரவேசித்தார்.

அவரை, பிரதி நிதி அமைச்சரும் சிரேஷ்ட அமைச்சருமான சரத் அமுனுகம, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோர் அழைத்துவர, ஆளுங்கட்சியினர் எழுந்துநின்று மேசைகளில் தட்டி வரவேற்றனர். அப்போது எதிரணியிலிருந்த எவரும் எழுந்திருக்கவில்லை.

ஜனாதிபதி தனது முன்மொழிவுகளை வாசித்துக்கொண்டிருந்த போது இடைநடுவில் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்துவிட்டு அவையைவிட்டு வெளியேறிவிட்டார்.

தனது முன்மொழிவுகளில் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்த போது ஆளுந்தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் போது , 'கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரும் போது கிழிந்த பாதணிகளை அணிந்திருந்தனர். இதனைப் பார்த்த எனது மனம் சங்கடத்துக்குள்ளாகியது' என்றார்.

இதேவேளை, நாட்டில் சக்கரை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தென்னங்கன்றுகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இதன்போது எதிர்க்கட்சியினர் நகைச்சுவையாக ஏதோ கூறுவதற்கு முற்பட்டனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தென்னங்கன்றுகள் சக்கரை உற்பத்திக்கு மாத்திரமே தவிர உள்ளூர் பானங்களைத் தயாரிப்பதற்கல்ல என்றார்.

வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கோப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா, தேநீர் இடைவேளையின் பிறகு ஜனாதிபதியிடம் ஏதோ ஒரு ஆவணத்தைக் கொடுத்து கையொப்பம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .