2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ராஜீவ் கொலை: மத்திய அரசின் மனுமீதான தீர்ப்பு விரைவில்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள்  வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டார்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளை 3 முதல் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று கூறினார்.

ஆனால் இவ்விவகாரத்தில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வலியுறுத்தினார்.

மத்திய, மாநில அரசு வாதம் முடிவடைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்படும் என்று நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஏப்ரல் 25 ஆம் திகதியுடன் சதாசிவம் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X