2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையை அவமதித்தால் கறுப்புக்கொடி போராட்டம்

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை அவமதிக்கும் செயற்பாட்டில் புதிய அரசாங்கம் ஈடுபட்டால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவேண்டி வரும் என வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.


வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வரத் தாமதமாகியதால் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவேண்டிய சபை அமர்வு காலை 10.09 மணிக்கே ஆரம்பமாகியது.


இதனையடுத்து, திங்கட்கிழமை (09) நடைபெற்ற மருதங்கேணி பிரதேச செயலக திறப்பு விழா மற்றும் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடத் திறப்பு விழா ஆகியவற்றுக்கு வடமாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உரிய முறையில் அழைக்கவில்லை யென்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.


இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறுகையில், 'வடமாகாண சபை அமர்வு இடம்பெறும் நாளில் திறப்பு விழாவை நடத்தியமை தவறு. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகும். முல்லைத்தீவு மாவட்டச் செயலக திறப்பு விழா 6 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தபோதும், பின்னர் அதனை இன்று(நேற்று) செவ்வாய்க்கிழமைக்கு (10) மாற்றினார்கள்' என்றார்.


அத்துடன், அழைப்பிதழில் முதலமைச்சர் பெயரைப்போட்டுவிட்டு, அங்கு முதலமைச்சர் செல்லாவிட்டால் மக்கள் தவறாக நினைக்கக்கூடும். இதனையே திட்டமிட்டுச் செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. முன்னைய அரசாங்கம் போலவே புதிய அரசாங்கமும் செயற்படுகின்றது. புதிய அரசாங்கம் புதிதாக நன்மை பயக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை' என்றார்.


தொடர்ந்து அன்ரனி ஜெகநாதன் கருத்து கூறுகையில், 'நல்லாட்சி என்ற நம்பிக்கையில் ஆரம்பித்து விட்டு, இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முதலமைச்சர், உறுப்பினர்களை அவமதிப்பதற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்றார்.


இது பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில், 'கடந்த 6ஆம் திகதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர் 9 மற்றும் 10 ஆகிய தினங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி. ஆனால் அத்தினத்தில் முக்கிய விடயங்கள் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என மறுப்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.


அழைப்பிதழில் நான் கலந்துகொள்வேன் என்றும் அங்கு உரையாற்றுவேன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. என்னிடம் கேட்காமல் எப்படி நான் உரையாற்றுவேன் என்று குறிப்பிடமுடியும். அழைப்பிதழ் அச்சிட்டுவிட்டு அழைக்க முடியாது. எங்களிடம் கேட்டபின்னரே அழைப்பிதழில் பெயரைப் அச்சிடமுடியும். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் வேதநாயகன் நாகலிங்கத்திடம் எனது செயலாளர் வினாவியபோது, அவர் அதற்குரிய சரியான பதிலை எனக்கு வழங்கவில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .