Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை (05) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்தது.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், விபத்தினால் ஏற்பட்டதல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த நிலையிலேயே, மேற்படி மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெஹிவளை - களுபோவில பள்ளிவாசல் வீதியில் மேற்படி மயானம் அமைந்துள்ளது என்று பொலிஸார் கூறினர்.
கடந்த 2012ஆம் ஆண்டில், நாரஹேன்பிட்டி மைதான வீதியில் தீப்பிடித்து எரிந்த காரொன்றுக்குள் இருந்து வசீமின் சடலம் மீட்கப்பட்டது. இந்த மரணம், திடீர் விபத்தின் மூலம் ஏற்பட்டதல்ல என்று பொலிஸார், ஏற்கெனவே நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வசீமின் பற்கள் மற்றும் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு பாரிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையிலேயே, மயானத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .