2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு போலி பணக்கடத்தல்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு போலி இந்திய பணத்தை கடத்தும் வியாபாரம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

போலி இந்திய பணத்தினை இலங்கையிலிருந்து கடத்தும் 16 நபர்கள் கொண்ட பிரதான குழுவைச் சேர்ந்த 6 சந்தேகநபர்கள், இந்தியாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து  இந்த தகவல் வெளியாகியுள்ளது.

போலி இந்திய பணத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் இராமநாதபுரத்தில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன்  கடந்த மூன்று நாட்களில் இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் வைத்து 6பேர் போலி நாணயத்தாள்களுடன் கைதாகியுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாகிஸ்தானில் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாரத ஸ்டேட் வங்கியின் கீஷாகரை கிளையில், போலி இந்திய தாள்களை மாற்ற முற்பட்ட இரண்டு பேர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்திய பண தாள்களில் உண்மையான பணத்தை போல குறியீடுகள் காணப்பட்டுள்ளதாகவம் இவை போலியென இலகுவில் அடையாளம் காணப்பட முடியாத வகையில் திறமையாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட முனேஸ் என்று அழைக்கப்படும் முருகன் என்ற சந்தேகநபரிடம் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின்போது, குறித்த நபர் 1,000 ரூபாய் இந்திய நோட்டுக்களை மாற்ற முயற்சித்துள்ளதுடன் சுமார் 42,000 பெறுமதியான இந்திய பண நோட்டுகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக அந்த சந்தேகநபர் கூறியதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் சொன்னதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபரான முனேஸ் என்று அழைக்கப்படும் முருகன், நேற்று ஞாயிற்றுக்கிழமை, பாம்பன் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,  கீசக்கரை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட யசீர் அரபாத் மற்றும் சையிட் இப்ராஹீம் ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கும் இந்த பணக்கடத்தல் கழுவுடன் தொடர்புடையதாகவும் இவர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 6 பேரும் 16 உறுப்பினர்களைக்கொண்ட கடத்தல் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் இந்த குழு ஏற்கெனவே இலங்கையிலிருந்து சுமார் 6 இலட்சம் பெறுமதியான போலி இந்திய பணத்தை இந்தியாவின் கேரளா பிரதேசத்துக்கு கடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த போலி தாள்கள் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் கூறியுள்ளனர். இந்த குழுவுடன் தொடர்புடைய நபர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் கொடைக்கானல் பிரதேசங்களில் உள்ளதுடன் அவர்களை கண்டறியும் புலனாய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கேரளாவிற்கு கடத்தப்பட்டதாக கூறப்படும் போலி இந்திய ரூபாய்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்திய பொலிஸ் குழு கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் போலி பண கடத்தல் குழு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படும் என நம்பப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .