2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தலுக்கு அழைத்தமை தவறான முடிவு: மஹிந்த

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளருடன் நேற்று புதன்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தற்போது நீங்கள், வருந்துகின்றீர்களா என எழுப்பிய கேள்விக்கு, சிரித்த முகத்துடன் பதிலளித்த அவர், 'வருந்தவில்லை எனினும் அது தவறான முடிவாகும் என்று பலரும் என்னிடம் தற்போது தெரிவிக்கின்றனர்' என்றார்.

ஜோதிடர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமா இந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டமைக்கு பதிலளித்த அவர், 'இல்லை, இல்லை, இல்லை அவ்வாறில்லை. எங்களுடைய அமைச்சர்களும் எம்.பி.களுக்கு விரைவாக தேர்தலை நடத்துமாறு கூறினர்' என்றார்.

அடுத்த பொதுத்தேர்தலில் 117 தொகுதிகளை வெற்றிகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிகொள்ளும் என்பதனை தான் உறுதியாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்படி வெற்றிக்கொண்டால், பிரதமர் பதவிக்கு நீங்கள் நியமிக்கப்படுவீர்களா என்று கேட்டமைக்கு பதிலளித்த அவர், 'அதனை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம்' என்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடன் பிரசித்தமான விவாதத்துக்கு தயாரில்லை என்றால் அது தனக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் விவாதத்துக்கு தயாரில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அது எனக்கும் பிரச்சினை இல்லை. அவர் வருகைதரவில்லை என்றால் சும்மா இருக்க கூறுங்கள் என்றும் அவர் கூறினார்.

நான், அதனை சவாலுக்கு உட்படுத்த வில்லை என்று நான் நினைக்கவில்லை. நான் அவ்வாறு செய்தேனா என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை. என்னால் என்னுடைய முகப்புத்தகத்துக்குள் நுழைய முடியவில்லை. அவ்வாறு நுழைந்தால் அதில் அவரையே சவாலுக்கு உட்படுத்துகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாக காலத்திலேயே 'கோட்டபாய ராஜபக்ஷவின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் வரை' விடுதலைப்புலிகளுக்கு நிதி கொடுத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

என்ன கிறுக்குத்தனம்? அவருடைய நிதியா கொடுக்கப்பட்டது. நிதியை மட்டுமன்றி கொடுக்கக்கூடிய அனைத்தையும் அவர் கொடுத்தார். அவர்களே ஆயுதங்களை கொடுத்தனர். வானொலி சாதனங்களைக் கொடுத்தனர். நாட்டைப் பிரித்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்தனர்.

அன்றிருந்த நிலைமையை தற்போது பலர் மறந்துவிட்டனர் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களும் ஒரே நேரத்தில் என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை மறக்கமுடியாது என்றார்.

அதனை தற்போது நீங்களும் மறந்துவிட்டீர்கள் தானே? இந்த நாடு இருந்த நிலைமையை மறந்துவிட்டீர்கள் தானே? அன்றிருந்த நிலைமை உங்களுக்குத் தெரியுமா? என்றும் ஊடகவியலாளரிடம் வினவினார்.

புலி அமைப்புக்கு நிதி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டானது 'பச்சைக் பொய்யாகும். பெற்றுக்கொண்ட வெற்றியை தரம் தாழ்த்துவது அவமரியாதையான செயலாகும்'

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது பேச்சுவார்த்தை 'இரகசிய பேச்சுவார்த்தையாகும்' என்பதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.

' அது இரகசிய பேச்சுவார்த்தை தானே? நீங்கள் இப்போது கூறினீர்கள் அது இரகசிய பேச்சுவார்த்தை என்று?,' அவர், மீண்டும், மீண்டும் சிரித்துக்கொண்டே கூறினார்.' அது இரகசிய பேச்சுவார்த்தையாகும். அப்படிதான் கூறுகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .