2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 3500 வேலையற்ற பட்டதாரிகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு மாகாணத்தில் 3,500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கிழக்கு மாகாண    வேலை வாய்ப்பற்ற   பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு  வேலை வாய்ப்பினை வழங்கக்கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மாணவர் சங்கம், இன்று மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில்    ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே மேற்கண்டவாறு   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் முன்னாலிருந்து     கல்முனை- மட்டக்களப்பு   பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரை  நோக்கி    பேரணி சென்றது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரிய நேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் இவர்களுக்கு ஆதரவு வழங்கி பேரணியில் இறுதிவரை கலந்துகொண்டனர்.

கல்லடி பாலத்தினூடாக பேரணி சென்றபோது சுமார் இரண்டு மணித்தியாலம் மட்டக்களப்பு - கல்முனை வீதி போக்குவரத்து   ஸ்தம்பிதமடைந்தது.

கச்சேரியை   அடைந்த பட்டதாரிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தனர்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

'கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மத்திய அரசும் மாகாண அரசும் தனியார் நிறுவனங்களும் அரசசார்பு, சார்பற்ற நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்திருந்தன. ஆனால், நீண்டகாலமாக பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்காமையினால் 2005 முதல் இன்று வரைக்கும் கூடுதலான பட்டதாரிகள் வேலையின்றி காணப்படுகின்றனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 1650 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 650 பேரும் அம்பாறையில் 1200 பேரும் வேலையற்று காணப்படுகின்றனர்.

தற்போது மத்திய மாகாண அரசிடம் உள்ள நியமனம் வழங்கும் நடைமுறையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும்போது பல்கலைக்கழகத்தில் இருந்த வெளியேறிய ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படவேண்டும்.
 அரச சுற்று நிருபத்துக்கு அமைய மூன்று வீதம் விசேட தேவையுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும்.

 40 தொடக்கம் 45 வரையான பட்டதாரிகள் வேலையற்று காணப்படுவதனால் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

முறைகேடான நியமனங்கள் தவிர்க்கப்படவேண்டும். மத்திய, மாகாண அரசுகள் வேலையற்ற பட்டதாரிகள் நலன் தொடர்பில் நிரந்த திட்டத்தை முன்வைக்கவேண்டும். வடக்குகிழக்கு பட்டதாரிகளுக்கு விசேட சலுகைகள் வழங்க வேண்டும் "


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X