2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

தடுத்துவைக்கப்பட்டுள்ள 839 எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்களில் இருவருக்கு எதிராகவே குற்றப்பத்திரம்

Super User   / 2011 ஜூன் 09 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

பூஸா, கொழும்பு, வவுனியா தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 839 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களில் இருவருக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்ககையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.

அரசாங்கம் தெரிவித்த எண்ணிக்கையை ஆட்சேபித்த அநுரகுமார திசாநாயக்க எம்.பி. "அமைச்சர்கள் 11,000, 12,000, 15,000 என பல்வேறு எண்ணிக்கையில் எல்.ரி.ரி.ஈ.யினர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். ஆனால் இன்று அரசாங்கத் தரப்பு பிரதம கொறடா 839 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். பூஸா, வவுனியா, கொழும்பு ஆகிய 3 தடுப்பு முகாம்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை வெலிகந்தை, திருகோணமலை ஆகிய இடங்களிலும் தடுப்புமுகாம்கள் உள்ளன" என்றார்.

அப்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன பேசுகையில், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே தான் பதிலளித்தாக தெரிவித்தார்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ.யினருக்கு எதிரான நீதிவிசாரணைகள் சிங்கள மொழியில் நடத்தப்படுவதால் அவர்கள் பெரும்  பிரச்சினையை எதிர்நோக்குவதாக அநுர குமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

'அப்போராளிகள் சிங்கள மொழி பரிச்சயமானவர்கள் அல்லர். அத்தகைய ஒருவருடன் நான் பேசினேன். அவருக்கு நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை அறிந்திருக்கவில்லை' என அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .