2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

’இது நல்ல பீரியட்’

Princiya Dixci   / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாங்கள் எல்லாம் துணியையே வைத்திருந்தோம், ஒவ்வொரு மாதமும் அலசி, அலசி, காயவைத்து, மடித்துவைத்துப் பயன்படுத்தினோம். இவளுக்கெல்லாம் என்னமோ? பேடாம் பேடு” இது வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வசதிகுறைந்த வீடுகளில், அந்த​ப் பெண்களின் தாய்மார், மாதத்துக்கு ஒருமுறையேனும் அதட்டிக்கூறும் வசன‍ங்களாக இருக்கும்.  

காலவோட்டத்துக்கு ஏற்ப வாழவேண்டும். இல்லையேல் நோய்நொடிகள் தொற்றிக்கொள்ளும். ஆனால், இந்தக் காலவோட்டத்திலும் பழைமைவாதம் இன்னும் இறுக்கப்பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளமை வேதனையானது. “PAD” பற்றி பொதுவெளியில் கதைப்பதை ​“BAD“ ஆகவே இன்னும் பலரும் பார்க்கின்றனர்.   

கடைகளின் கண்ணாடிப் பெட்டிகளில் கலர்கலராகக் கண்ணுக்குத் தெரியும் வகையில், வீதியை நோக்கிவாறு, கண்களை ஈர்க்கும் வகையில், அடுக்கிவைக்கப்பட்டிருக்கும், மாதவிடாய்த் துவாய்களை (Sanitary Napkin or Pad) பெண்கள் வாங்குபோது மட்டும், பழைய பத்திரிகையில் சுற்றி, கறுப்பு ​ெஷாப்பிங் பேக்குகளில் போட்டுக் கொடுப்பது எதனை மறைப்பதற்காக என்பது புரியவில்லை.  

இவ்வாறு சுற்றித்தருமாறு சில பெண்கள் கேட்டுவாங்குவது எதற்கென்றும் தெரியாது. உடலில் ஏற்படும் ஏனைய வலிகளைச் சொல்வது போன்று, மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. காரணம் மாதவிடாய் வலி நிறைந்தவை.   

அந்த 3 - 7 நாள்களின் வேதனையை விடவும், அந்த நாள்களுக்கான மாதவிடாய்த் துவாய்களின் விலைகள், சுற்றிக்கொண்டிருக்கும் தலையை, கிறுகிறுக்கச்செய்துவிடும். அப்பொழுதுதான் அம்மா சொல்லும் “பழைய துணிக்கு” மௌசு கிராக்கியாக்கிவிடும். ஆனால், பழையன கழிதல்வேண்டும். சுத்தம் சுகாதாரம் வேண்டும்.   

வெளிப்படையாகக் காட்சிப்படுத்தும் மாதவிடாய்த் துவாய்களை மற்றவர்களுக்குத் தெரியா​மல் சுற்றிக்கொடுப்போர், மறைத்து வைத்திருக்கும் ஆணுறைகளை வாங்கும் போது, எவ்விதமான மறைப்புகளும் இன்றி வழங்குகின்றனர். வாங்குவோரும் அப்படித்தான் வாங்கிச்செல்கின்றனர். கொழும்பில், ஆணுறைகளை விநியோகிக்கும் இயந்திரங்களும் பகிரங்கமாக நிமிர்ந்துநிற்கின்றன.   

பலவற்றை மறைத்து வைத்துப் புனிதம் என்றும், ஒதுக்கி வைத்துவிட்டுத் தீட்டு என்கின்றன மதங்கள். இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மதம் சொன்னது பிழையெனச் சொல்ல நமக்குத் தகுதியில்லை. ஆனால், அதைத் தவிர்த்திருந்திருக்கலாம். ஏனெனில், மாதவிடாய்க் காலத்தை யாரிடமும் சொல்லாவிடின், சிறுநீர், மலம் கழித்துவிட்டு, மதவழிபாட்டுத் தலங்கள்,

ச​மையலறைகளுக்குச் சென்றுவருவதைப் போல சென்றுவரலாம். அப்போது யாருக்குமே தெரியாது.  

மாதவிலக்கு இடையில் வந்ததல்ல. மருத்துவம் முன்னேறாத காலங்களில், வலி மற்றும் உடல்/உள ரீதியான சோர்வால் அல்லது நடந்து திரியும் போது, மாதவிடாய் இரத்தம் சிந்துவதன் காரணமாக, மாதவிடாய் நாள்கள், முழு ஓய்வில் இருத்தல் நல்லதெனப் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் அதுவே ‘புனிதம்’, ‘தீட்டு’ ஆகியிருக்கலாம்.   

இந்த ஆராய்ச்சிகள் இப்போதைக்கு தேவையில்லாத ஒன்றாகும். ஏனெனில், தன்னுடைய சகோதரிகளுக்கு, மனைவிக்குக் கூட மாதவிடாய்த் துவாய்களை வாங்கிக்கொடுக்காத ஆண்கள், “PAD” பற்றிப் பொதுவெளியில் பேசத் தொடங்கிவிட்டனர். ஜனாதிபதித் தேர்தல் களத்தில் அனல்பறந்து​கொண்டிருக்கிறது “PAD”.  

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ “Pad Man” ஆகியுள்ளார். இவருடைய இந்த ஆரம்பம், வாக்காளர்கள் என்ற வகையில் அல்லாமல், பெண்கள் என்றவகையில் பார்க்கும்போது நல்ல​தோர் ஆரம்பமாகும் என்பதே கட்டுரையாளரின் கருத்தாகும்.   

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பெண்களின் சுகாதார வசதியை வலுப்படுத்தல் அமைந்துள்ளது. அதன் உச்சகட்டமாக, மாதவிடாய்த் துவாய்களை, பெண்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.   

இக் கருத்தாடலே பல்வேறு மட்டங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், அரசியல் அவதானிகள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமானதாகப் பார்க்கப்படுகின்றது. பாலின சமத்துவம், பெண்களின் கல்வி வளர்ச்சி தொடர்பில் கொக்கரிக்கும் சமூகத்தினர் கூட பெண்களின் சுகாதாரத் தேவைகள் தொடர்பில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் மேற்படி வாக்குறுதியளித்துள்ளார்.   

உறிஞ்சும் தன்மை கொண்ட மாதவிடாய்த் துவாய்களை , பெண்கள், மாதவிடாய் நாள்களின் போது இரத்தக் கசிவு ஆடைகளில் படியாதிருக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும், யோனி சீராக்கல் அறுவைசிகிச்சை, குழந்தைப் பிறப்புக்குப் பின்னரான மிகையான இரத்தப்போக்கு, பெண்களின் யோனியிலிருந்து இரத்தப்போக்கு நிகழக்கூடிய கருக்கலைப்பு போன்ற பிற நேரங்களிலும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.   

இது பெண்களின் உள்ளாடைக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் அணியப்படுகிறது. யோனியின் உள்ளே அணியும் மாதவிடாய்க் குப்பி (menstrual cup) போலன்றி உடலின் வெளிப்புறம் இது அணியப்படுகிறது.நவீனத்துவ வளர்ச்சிகளுக்கு ஏற்றாற் போல, மாதவிடாய்த் துவாய்களின் தன்மையிலும் வடிவமைப்பிலும் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் காணப்படினும், உலகின் நவீனத்துவம் எட்டாத, பொருளாதாரத்தால் நலிவடைந்த பெரும்பகுதிகளில் வாழும் பெண்களுக்கு அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.  

இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் மாதவிடாய்த் துவாய்களுக்கு 101.2 சதவீதமான வரி, அறவிடப்பட்டு வந்தது. எனினும், 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுத்த எதிர்ப்பின் காரணமாக, CESS வரி நிதியமைச்சால் அது 61 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 35 சதவீதத்துக்கும் அதிகமான வரிவிலக்காக இது இருந்தாலும்கூட 60 சதவீதமான வரி இன்றுவரை இதனூடாக அறவிடப்படுகின்றது.   

இலங்கையில் முழுச் சனத்தொகையில் நூற்றுக்கு 52 சதவீதமானவர்கள் பெண்கள் என்றாலும் மாதவிடாயுடன் தொடர்புடைய மாதவிடாய்த் துவாய்களுக்குப் பணத்தைச் செலவிட்டு, அதன் பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பு 4.2 மில்லியன் பெண்களுக்கே கிடைத்துள்ளது. இன்றும் இலங்கையில் அதிகளவான பெண்கள் சொகுசு மாதவிடாய்த் துவாய் சுகாதார உற்பத்திகளை பயன்படுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது.  

சாதாரணமாகப் பெண்களுக்கு மாதவிடாய் காணப்படும் நாள்களின் நாளொன்றுக்கு நான்கு மாதவிடாய்த் துவாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாகக் காணப்பட்ட வரி விதிப்புக்கு அமைய இதனை வாங்குவதற்கு மாதமொன்றுக்கு 520 ரூபாய் தேவைப்படுகின்றது.   

இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டுக்குள் உள்ள நூற்றுக்கு 20 சதவீதமான வீட்டு உரிமையாளர்களின் சராசரி மாதாந்த வருமானம் 14, 843 ரூபாய் ஆகும். இவ்வாறான நிலையில் வீட்டு உரிமையாளரால் மாதவிடாய்த் துவாய்கள் கொள்வனவுக்கு தமது செலவில் நூற்றுக்கு 3.5 சதவீதம் ஒதுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

அவர்களின் வருமானத்தில் ஆடைகளுக்காக ஒதுக்கப்படும் சதவீதமான நூற்றுக்கு 4.4 சதவீதத்தைப் பார்க்கும் போது, இது மிகவும் கடுமையான நிலையாகும். அதிலும், இரண்டு, மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கும் குடுப்பங்களின் திண்டாட்டம் சொல்லிலடங்காது.   

இலங்கையில் வயது வந்த பெண்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் நாள்களில் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டது.  

அதற்கான காரணத்தைக் கேட்டபோது, நூற்றுக்கு 68 முதல் 81 சதவீதமானவர்கள், அதிக வேதனை, உடல் ரீதியான அசௌகரியம் காரணமாகப் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு 23 முதல் 40 சதவீதமானவர்கள், ஆடைகளுக்கு வெளியே இரத்தம் கசிந்துவிடும் என்ற அச்சத்தால் பாடசாலைக்குச் செல்லதில்லை என்று கூறியுள்ளனர்.   

மாதவிடாயின் போது, மாதவிடாய்த் துவாய்களைப் பயன்படுத்த முடியாமல் தற்காலிக, சுகாதாரமற்ற பொருள்களைப் பயன்படுத்துவதால் மிகவும் பாதிப்பான முடிவுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏழ்மையான மாதாந்த சுகாதார முகாமைத்துவம் (MHM) பாரதூரமான பால்வினை நோய்களுக்கு வழிகாட்டுகின்றது.   

கர்ப்பப்பை புற்றுநோய் எச்சரிக்கை தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மாதவிடாய் நாள்களில் துணிகளைப் பயன்படுத்துவது அதற்கான காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. இவை கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகுவதில் தாக்கம் செலுத்தியுள்ளன.  

இதனை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் இலங்கையில் பெண்களுக்கிடையில் காணப்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளமை ஆகும்.   

ஆடம்பரக் கார்களுக்கும் மிக அத்தியாவசியமான மாதவிடாய்த் துவாய்களுக்கும் நாட்டில் ஒரேமாதிரியான வரி அ‌றவிடப்படும் துர்ப்பாக்கிய நிலைமையைத்தான் இது காட்டுகின்றது.   

மாதவிடாய்த் துவாய்களுக்கான வரிவிலக்கை வழங்குவதன் மூலமாக, கல்வி கற்கின்ற பெண்களின் சதவீதத்தை அதிகரிக்க முடிவதுடன், சமூகத்துக்குப் பங்களிப்பு வழங்கும் பெண்களின் சதவீதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகரிக்கக் கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.   

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மாதவிடாய்த் துவாய்களை மானிய விலையில் பெற்றுக்கொடுக்கின்றமை ஊடாக, மாதவிடாய் நாள்களில் அவர்கள் சேவைக்குச் சமூகமளிக்காத வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உற்பத்தி அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.  

சர்வதேச ரீதியில் மாதவிடாய்த் துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதை நீக்குமாறு தெரிவித்து, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இவ்வாறான சுகாதார உற்பத்திகளுக்குகூட அதிகபட்ச வரி அறவிடப்படுகின்றமையால் அதனைப் பெற்றுக்கொள்ள அதிக பணம் தேவைப்படுகின்ற நிலையில், பெண்களுக்குச் சாதாரணமாக பருவ மாற்றத்தால் ஏற்படுகின்ற மாதவிடாய், ஒரு “தரித்திரமாக” பெயரிடப்பட்டுள்ளது.   

மாதவிடாய்த் துவாய்களுக்காக வரியை நீக்கிய முதலாவது நாடாக கென்யா காணப்படுவதுடன், 2004ஆம் ஆண்டு இவ்வாறு வரி நீக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, அயர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் அதற்காக வரியை அடுத்தடுத்த வருடங்களில் நீக்கிக்கொண்டன.  

முன்னொரு காலத்தில் இந்தியா, கேரளாவில் குறைந்த சாதிப் பெண்களுக்கு “முலை வரி” (மார்பக வரி) விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாஞ்செலி என்ற பெண், வரி அறவிட வந்த அதிகாரிகளுக்கு ஓர் இலையில் தனது இரு மார்பகங்களையும் அறுத்து, அந்த இலையின் மீது வைத்துப் பரிமாறினார் எனச் சொல்லப்படுகின்றது.   

இவ்வாறான மறைமுக வரி தொடர்பில் இன்​று எவரும் வாய் திறக்க வரும்பாத நிலையில், பொது நோக்கம் கொண்டோ அல்லது அரசியல் தேவை கருதியோ மாதவிடாய்த் துவாய்களுக்கான வரி அறவிடப்படுகின்றமை பேசப்பட்டு வருகின்றது. எனினும், இது கேலிக்கும் உள்ளாகாமல் இல்லை. எனவேதான், ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை “PAD Man” என சமூக வலைத்தளங்கள் விழித்துள்ளன.

இந்தியாவில், குறைந்த விலையிலான நப்கின்ஸ் கண்டுபிடிப்புகளுக்காகவே பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகதாஸ். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ் உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் அருணாசலம் முருகதாஸை இணைத்திருந்தது. இவரது வாழ்க்கைக் கதையை ஹிந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி ‘பேட்மேன்’ (Pad Man) என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

மாதவிடாய் காலத்தை, “பீரியட்” என்பர்கள். மாதவிடாய்த் துவாய் பொதுவெளியில் கிடக்கிறது இது நல்ல பீரியட் ஆகும். இந்த நல்ல பீரியட் பிந்திவிடக்கூடாது. பேசும் பொருளாகவே இருக்கவேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .