2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

இனவாதம் கட்டவிழும் பொழுதுகளில்...

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதம் மிகப்பயங்கரமான ஆயுதம். அதைக் கட்டமைப்பது சுலபம்; ஆனால், அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மனித மனம் போல, கட்டுக்கடங்காமல் அலைபாயும் தன்மை அதற்குண்டு. தேர்தலுக்குப் பிந்தைய இலங்கையை, எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற வினாவுக்கான சரியான விடை, இனவாதம் கட்டவிழ்கிறது என்பதாகும். இந்தச் சவாலைப் புதிதாகத் தெரிவாகியுள்ள ஜனாதிபதியும் அரசாங்கமும் வெற்றிகரமாகக் கையாள வேண்டியுள்ளது. 

இலங்கை போன்ற பல்லின மக்களைக் கொண்ட நாட்டில், இனவாதம் கட்டவிழும் பொழுதுகள் ஆபத்தானவை. 

தேர்தல் பிரசாரங்களின் போது, ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்ட இனவாதமும் சிங்களப் பௌத்த பெருந்தேசியவாத அகங்காரமும் அதன் பலனைத் தேர்தலில் அளித்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது முடிவல்ல; தொடக்கம் மட்டுமே! புதிய அரசாங்கத்துக்கு, மேலெழுந்துள்ள இனவாதம் வாய்ப்பானது. இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமைகள், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, வேலையில்லாப் பிரச்சினைகள் என்பவற்றை எதிர்கொள்ளும் திராணி, எந்தவோர் அரசாங்கத்துக்கும் இல்லை. ஏனெனில், அதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய அரசாங்கத்தைக் காக்கும் கருவியாக இருக்கப் போவது இனவாதமே. 

இது நாட்டின் உண்மையான பிரச்சினைகளை, மக்கள் உணராவண்ணம் மறைத்தும் பூசி மெழுகியும் நாட்டின் ஜனநாயகமும் உரிமைகளும் மெல்ல மெல்லச் சிதைக்கப்படும் ஆபத்தை நாம் எதிர்நோக்கி நிற்கின்றோம். 

இன்றைய இலங்கை அரசியலில், பிழைப்பதற்கான வழிக்கு சாதி, மதம், இனம், மொழி ஆகியன எல்லாமே அவசியமான பண்டங்கள்; இவை வேறுவேறு வழிமுறைகளில் கட்டவிழ்கின்றன. எனவே, இதையெதிர்த்துப் போராட வேண்டியது அவசியமானது.

சிங்களப் பேரினவாதமும் அதை எதிர்க்கும் தமிழ்ப் தேசியத்தின் குறுகிய பார்வைகளும்  எந்த வகையிலும் பரந்துபட்ட மக்களின் நலன்களுக்கு உகந்தவை அல்ல.  எனவே, மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சினேக ரீதியில் தீர்க்க முயல்வதானது, அம்முரண்பாடுகள் பகை முரண்பாடாக, வளராமல் பார்த்துக் கொள்ளவியலும். 

ஒரு சமுதாயத்தின் வெவ்வேறு இனங்கள் மத்தியில், மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் இருப்பது, அதிசயம் இல்லை. அவை காலத்துக்குக்காலம் களையெடுக்கப்படாமல், திட்டமிட்டே வளர்க்கப்படும் போதுதான், அவை உறவுகளை அபாயகரமான முறையில் பாதிக்கின்றன. 

இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டும் திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டும் வந்துள்ளன இன உறவுகள் பற்றி, இப்போதாவது பேசவேண்டும்.  இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.  

இப்போது இன உணர்வு பற்றி, யாருவே அதிகம் கூச்சப்படுவதில்லை; பல சந்தர்ப்பங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே, இன உணர்வு இருந்துள்ளது. இன, உணர்வு என்பது, ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும், சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது, அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை. இன உணர்வு என்பது, ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயற்படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும் காரணத்தால், அது முற்றாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது, இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்வன. ஆயினும், மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும், இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. அதேவேளை, இனஉணர்வு இல்லாமை என்பது மட்டும், முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா, வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இனஉணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. 

இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, பண்பாட்டு வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது, முரண்பாடுகள் பகைமைத் தன்மை பூண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து, சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம், இன வெறியாகிறது.

இலங்கை அதை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது மீளமுடியாத பாதை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இனிவரும் வாரங்களில், இனவாதம் எவ்வாறு இலங்கையில் செயற்படுகிறது என்பதே, இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .