Editorial / 2026 ஜனவரி 22 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை அல்லது பிராதை தாக்கல் செய்ய எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை மறுதவணையிட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
குறித்த வழக்கானது புதன்கிழமை(21) அன்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திறந்த மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை பெரிய நீலாவணை பொலிஸார் சமர்ப்பணங்களை மேற்கொண்டு இவ் வழக்கில் சந்தேக நபரது வாக்கு மூலத்தை இன்னும் பெறவில்லை என்றும் பொலிஸ் சட்ட பிரிவுக்கு அனுப்பிய கோவைக்கான ஆலோசனை கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும் அது கிடைக்க பெற்றவுடன் மன்றுக்கு அறிக்கையிட வேறு தினம் ஒன்றை வழங்குமாறு கோரி இருந்தனர்.
மேற்படி சமர்பணத்திற்கு தனது ஆட்சேபனையை பதிவு செய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களை மேற்கொண்டு குறித்த இவ்வழக்கிலே சந்தேக நபரின் வாக்கு மூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை அல்லது பிராது சமர்ப்பிக்குமாறு கடந்த தவணையில் மன்றினால் தெளிவான கட்டளை ஆக்கப்பட்டிருத்தும் வழக்குத் தொடுனரான பெரியநீலாவணைப் பொலிஸார் தொடர்ந்தும் இவ்வழக்கை தாமதப்படுத்தும் நோக்கோடு மீண்டும் மீண்டும் தினம் கோரிவருவதாகவும் குறித்த இவ்வழக்கில் நீதியைக் கண்டடையும் பொருட்டு சந்தேக நபரின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறும் மன்றைக் கோரி இருந்தார்.
இருபக்க சமர்ப்பணங்களையும்கேட்டறிந்த மன்றானது சந்தேக நபரது வாக்குமூலத்தைப் பெற்று வழக்கின் இறுதி அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையாக்கியது.
இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
செய்திப் பின்னணி
2022 ஆம் ஆண்டு மஹாதேவன் முரளிதரன் என்ற முறைப்பாட்டாளரினால் பெரியநீலாவணைப் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பெரியநீலாவனைப் பொலிஸாரினால் 28.11.2022 ஆந் திகதி பீ அறிக்கை ஒன்று கல்முனை நீதிவான் நீதிமன்றிலே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பீ அறிக்கையின் பிரகாரம் முறைப்பாட்டாளரின் உறுதியொன்றை எழுதி நிறைவேற்றிய பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரது நொத்தாரிசுக் கடமையை புரியவிடாது இடையூறு விளைவித்ததன் மூலம் சந்தேகநபரானவர் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவுகளை மீறியுள்ளதாக குறித்த பீ அறிக்கையில் சார்த்துகை செய்யப்பட்டு இருந்தது.
குறித்த வழக்கோடு தொடர்புபட்ட சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் பிரசித்த நொத்தாரிசின் கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டு அது தொடர்பில் நீதிமன்றினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக குறித்த கையடக்கத் தொலைபேசிகளின் சேவை வழங்குனரின் தொலைத் தொடர்பு அறிக்கைகள் மற்றும் ஏனைய தரவுகள் பெறப்பட்டு சந்தேகநபரானவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரானவர் பிரசித்த நொத்தாரிசுக்கு அழைப்பு ஏற்படுத்தியமை தொலைத் தொடர்பு அறிக்கைகளின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் கடந்த 03.12.2025 யில் மன்றில் மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்த வழக்குத் தொடுநரான நீலாவனைப் பொலிஸார் ஜெயலக்சி டீ சில்வா என்பவரை குறித்த வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி குறித்த வழக்கின் புலன் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 120(3) யின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அல்லது 136 (1) (ஆ) யின் ஏற்பாடுகளின் கீழ் பிராதைத் தாக்கல் செய்யுமாறு கெளரவ கல்முனை நீதிவான் வழக்குத் தொடுநருக்கு கட்டளையாக்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 07.01.2026 யில் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போது வழக்குத் தொடுநரான நீலவணைப் பொலிசார் சமர்ப்பனங்களை மேற்கொண்டு குறித்த வழக்கின் சந்தேகநபரானவர் அம்பாறையில் அமர்கின்ற மாகாண மேல்நீதிமன்றின் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வருவதனால் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகரினால் தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இது தொடர்பான வழக்கு கோவையானது கெளரவ சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் ஆலோசனையைப் பெற்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிறிதொரு தினம் வழங்குமாறு மன்றைக் கோரி இருந்தனர்.
குறித்த சமர்ப்பணத்திற்கு தமது கடுமையான ஆட்சேபனைகளை பதிவுசெய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் குறித்த வழக்கிலே இறுதி அறிக்கை அல்லது பிராது தாக்கல் செய்வதற்கு தினம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளும் பிரியத்தனமானது குறித்த வழக்கில் அசாதாரணமான காலதாமதத்தை ஏற்படுத்தி இவ்வழக்கின் போக்கை மடைமாற்றம் செய்வதற்கான ஒரு எத்தனம் எனவும் வழக்குத் தொடுநரின் இவ்வாறான நகர்வுகள் நீதியைக் கண்டடைவதற்கு தடையாக அமைவதோடு சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற உயரிய சட்டவாட்சிக் கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும்
கடந்த சில மாதங்களாக நிறைவேற்றத் துறையின் உச்சாணிக் கொம்பில் இருந்தவர்கள் கூட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சட்டம் எல்லோருக்கும் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் உயர் பதவிநிலையில் இருப்பதானது விடுபாட்டுரிமையைவவழங்காது எனவும் மன்றில் சமர்ப்பணங்களை மேற்கொண்டார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் கேட்டறிந்த கெளரவ மன்றானது சந்தேக நபரின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படாமல் அது தொடர்பான கோவையானது கெளரவ சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டமையானது ஒரு குறைபாடு என்பதை சுட்டிக்காட்டி சந்தேக நபரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கும் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கும் பிறிதொரு தினத்தை வழங்கி இருந்தது.
அந்த அடிப்படையில் குறித்த வழக்கானது மீண்டும் 21.01.2026 யில் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago