2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும்

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன.   

இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பிக்கும் காரியங்களை ஊடகங்களும் உணர்ச்சியூட்டும் செயல்​களைப் பௌத்த பிக்குகளும் செய்வதைக் கடந்த இரண்டு வாரங்களில் கண்டுள்ளோம்.   

இதில் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு; ஊடகங்களுக்கு இலாபம்; பிக்குகளுக்கு வசதி; ஆனால், சாதாரண மக்களுக்கு என்ன என்ற கேள்வி முக்கியமானது.   

இனமேன்மை, இனவாதமாகி, இனவெறியாகப் பரிமாணம் பெறுகிற போது, அது மதம் பிடித்த யானைக்கு ஒப்பானது.   

எனவே,இனவாதம் பேசுபவர்கள், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால், இனவாதமும் இனவெறியும் தேர்தல் வெற்றிக்கான முக்கிய கருவிகளாகத் தென்னாசிய சமூகங்களில் பயன்படுகிறது.   

யார், அதிதீவிர இனவெறியர் என்பது, சில சமயங்களில் முக்கியமானது. ஏனெனில், மென்போக்கு இனவாதம் கிளுகிளுப்பானதாகவோ, உணர்ச்சி ஊட்டக்கூடியதாகவோ இருப்பதில்லை. எனவே, கடும்போக்கு இனவாதமே விரும்பப்படுகிறது.   

அதேவேளை, இனவாதத்துக்கு எதிரான இன்னோர் இனக்குழுவின் கடுமையான பதிலிறுப்பு, மென்போக்கு இனவாதத்தைப் பயனற்றதாக்குகிறது. எனவே, அரசியலுக்குக் கடும்போக்கு இனவாதமே பலனளிக்கிறது.  

முன்னேறிய, நாகரிகமான சமூகங்களுக்கு, இனவெறி கட்டவிழ்வது, இக்காலத்தில் முரணாகத் தெரியலாம். ஆனால், வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், இதன் உண்மை விளங்கும்.  

ஒரு சமூகம் முன்னேறிய ‘நாகரிக’ சமூகம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. அமெரிக்காவில், நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஆரிய இனவெறி ஆகியவை எல்லாம் பின்தங்கிய சமூகங்களுக்கு உரியவையல்ல. எனவே, நாகரிக சமூகங்களில் இனவாதமும் இனவெறியும் உண்டு. இன்று ஐரோப்பாவில் பரவும் தேசியவாத ஜனரஞ்சக அலையில், இனவாதத்துக்கும் வெள்ளை நிறவெறிக்கும் பங்குண்டு.  

நவீனமயமாக்கம் சமூகங்களை மட்டுமல்ல, இனவெறி பரப்பப்படும் பரவும் வகைகளையும் நவீனமாக்கியுள்ளது. நம் கண்களுக்கே தெரியாத வழிகளில், இனவெறி அரங்கேறுகிறது.   
நவீன தொழில்நுட்டபங்கள், அதை இயலுமாக்குகின்றன. நாகரிகமடைந்த படித்த மனிதர்களே, இதன் ஊற்றுவாயாய் இருக்கிறார்கள். இதற்கு இலங்கை விதிவிலக்கல்ல.  

இன்று, இலங்கையில் இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. இதன் ஆபத்து யாதெனில், ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.   

இலங்கை, பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு; இதற்கெதிரான போராட்டம் இன்றைய பொழுதுகளில் தவிர்க்கவியலாத ஒன்று.   

மனிதனது பலவீனங்களை, ஆளுவோரும் அதிகாரமும் எப்போதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. இனஉணர்வு, இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு ஓர்ஆதாரமாகவே தோன்றினாலும் அது உண்மையில் அவனுடைய பலவீனம்.   

அந்த இன உணர்வை, மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன.   

அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள். இந்தக் கொடுங்காரியத்தை ஊடகங்கள் முன்னின்று செய்கின்றன.  இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான சண்டையை, இனங்களுக்கு இடையிலான சண்டையாக்குகின்றன. ஊடகங்களுக்கு இது வியாபாரம்; நல்ல விற்பனைச் சரக்கு.  இவ்வாறான மோசமான செயற்பாடுகள், கண்டிக்கப்பட வேண்டும். இதற்கு மக்களின் பரந்துபட்ட ஒற்றுமை அவசியம்.   

இனவாதத்துக்கும் இனவெறிக்கும் எதிரான போராட்டம், கடினமான பணி. இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு, உண்மை உடனடியாகப் புலனாகாது.   

அதற்காக, நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை. இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றால் கலங்குண்ட மனங்களைத் தெளிய வைக்கும் கடமை, நம்முன் உள்ளது.  

இந்தப் பணியில் முதன்மையானது யாதெனில், மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக அடையாளம் காணும் நாம், நம் மத்தியிலுள்ள இனவாதத்தையும் அடையாளம் காணத் தவறக்கூடாது. இதைச் செய்யாமல், நாம் இனவாதம் குறித்துப் பேசவியலாது.  

இனவாதத்தையும் இனவெறியையும் ஒழிப்பது என்பது, பலமுனைப் போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இதுவே, இனவெறிக்கு எதிரான, பரந்துபட்ட மக்கள் ஐக்கியத்தைக் கட்டுவதற்கான போராட்டத்தின் முதற்பணி ஆகும்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .