2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

எல்லை நிர்ணய பிரச்சனைகள்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஜப்பான், இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர்கள் அண்மையில் சந்தித்துக்கொண்டதில் முக்கியமாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்று, இரண்டு நாடுகளும் இணைந்து சீனாவின் எல்லை வரையறை, எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஆசிய பிராந்திய ஒழுங்கிற்கு  மிக முக்கியமான சவாலாக இருக்கும் சீனாவின் வெளிவிவகார கொள்கையை, அடிப்படையில் பட்டுப்பாதை தொடர்பான எண்ணக்கருவுக்கு எதிராக குரல் கொடுக்க செயற்படுவதும், அது தொடர்பில் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடலும் என்பதே ஆகும்.

அண்மைக்காலங்களில் சுமார் 23 எல்லை பிராந்திய பூசல்களில் 17, சீனாவின் கணிசமான பிராந்திய சமரச அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கின்ற போதிலும், குறிப்பாக ஹொங் ஹொங், தாய்வானின் எல்லை மறுசீரமைப்பு சீனாவால் சமரச முயற்சியின் அடிப்படையில் தீர்க்கப்படாமைக்கு சீனா முன்வைக்கும் காரணங்களில் ஒன்று குறித்த சமரச முயற்சிகள் சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் விருப்புக்கு முரணாக அமையும் நிலையாகும், என்பதுடன், தேசிய நலனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், கிளர்ச்சிகள், சட்டபூர்வமான நெருக்கடிகள் முன்வைக்கப்பட அவை காரணமாக அமையலாம் என்பதேயாகும். ஏனைய ஆறு எல்லை பிரச்சனைகளை பொறுத்தவரை சீனா தனது கொள்கையை பல்லாண்டு காலமாக மாற்றமையே காரணம் எனலாம்.

குறிப்பாக, இந்தியா, ஜப்பான் விடயங்களில் சீனாவின் வெளிவிவகார நிலைப்பாட்டை பின்வருமாறு அவதானிக்கலாம்.

இந்தியாவின் விஷயத்தில், சீனா எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள் 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது.

தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையை பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில் சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80% ஆன கடல் பிராந்தியம் சீனாவுக்கு சொந்தமானது என்ற ஆட்புல நிர்ணயமும் அதனைத் தொடர்ந்து சர்வதேச தீர்ப்பாயம் குறித்த சீனாவின் ஆதிக்கம் சர்வதேச நீதிக்கு முரணானது என தீர்ப்பளித்தமையையும் அவதானிக்கலாம். தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தொடர்ந்தும் சீனா தனது ஆதிக்கத்தை குறித்த கடற்பரப்பில் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு சீன கடல் எல்லையை பொறுத்தவரை சீனா, ஜப்பானுக்கு சொந்தமான சென்காக்ஸ் தீவுத்திடலைகளை தனது வான்படைக்கு சொந்தமான பாதுகாப்பு நிலப்பரப்பாக பிரகடனம் செய்தமையை தொடர்ந்து ஜப்பான் - சீனா இடையிலான உறவில் விரிசல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாய்வானை பொறுத்தவரை, சீனா ஆயுத நடவடிக்கையை செயல்படுத்தியாவது சீனாவுடன் தாய்வான் இணைந்திருப்பதை உறுதிசெய்ய ஆயத்தமாய் இருப்பது சீனாவின் பிராந்திய எல்லை நிர்ணயம் தொடர்பான வன்போக்குக்கு இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்ததாக பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்ற சீனா மேற்குறித்த எல்லை மீள்நிர்ணயங்களால் எவ்வாறாக சர்வதேச மட்டத்தில் இந்திய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதனை பற்றியே இப்பத்தி ஆராய்கின்றது.

இந்திய மற்றும் ஜப்பானிய எல்லைகள் மீதான திணிப்புக்கள், மற்றும் நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் அச்சுறுத்தும் முயற்சிகள் சீனாவால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஜப்பானை ஒரு மூலோபாய பங்காளித்தனத்தை தோற்றுவிக்க தூண்டிவிட்டன. இவை ஜப்பான் மற்றும் இந்தியா வருடாவருடம் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் மூலமான இருதரப்பு பாதுகாப்பு பயிற்சிகள், ஆயுத பரிவர்த்தனை மேலும், கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் அவற்றின் உருவான கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதற்கு காரணங்களாய் அமைந்திருந்தது. குறித்த கூட்டாண்மையானது குறிப்பிடத்தக்கவகையில் அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடன் தனித்தனி முக்கோண உரையாடல்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், வருடாந்தர மலபார் பயிற்சிகளில் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் சேர்த்துக்கொள்ளப்படுவது மற்றும் இந்த நான்கு நாடுகளால் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட நான்குமுனை உரையாடல் என்பன சீன ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு மென்போக்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

தாய்வான் பிரச்சினையை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கொள்கைகள் மிகவும் சுயாதீனமாக மாற்றமடைந்தமை கவனிக்கப்படவேண்டியதாகும். ஜம்மு காஷ்மீரின் குடியிருப்பாளர்களுக்கு சீனா நிரந்தர வதிவிட உரிமை விசாக்களை வழங்கியதன் காரணமாக, அதன் கொள்கையில் ஒரு மாற்றத்தைச் சுட்டிக்காட்டி, இந்தியா 2010ஆம் ஆண்டி ல் இருந்து சீனாவின் ஒரு நாட்டு கொள்கைக்கு  புறம்பான கொள்கையை இந்தியா அறிவித்திருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் மாநில அமைச்சர் வி.கே.சிங்கினால் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவர், "தாய்வான் மீதான இந்தியாவின் கொள்கையானது தெளிவானது மற்றும் உறுதியானது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாச்சாரம், கல்வி மற்றும் பங்கு சந்தைகளில் ஊக்குவிப்பதற்கான இந்திய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்திருந்தமை கவனிக்கப்படவேண்டியதாகும்.

 ஜப்பானை பொறுத்தவரையிலும் 1970 களில் மட்டும் 'ஒரு சீனா' கொள்கைக்கு உறுதியளித்த ஜப்பான் அதன் பங்கிற்கு, 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து தாய்வானுடனான தொடர்பை அதிகப்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து, தாய்வானின் பிரச்சினைக்கு ஒரு பொதுவான மூலோபாய தீர்மானத்தை மேற்கொள்வதற்கான அவசியத்தை அடையாளம் காட்டியது. ஜப்பானிய- ஐக்கியஅமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 2015 வழிகாட்டுதல்கள் 'முன்-திட்டமிட்ட புவியியல் வரம்பை' அதன் சுற்றுப்பாதையாக வரையறுக்கவில்லை என்றாலும், இந்நிகழ்ச்சி நிரலானது ஜப்பான் அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான சட்டங்களை இயற்றியமை மற்றும், அதன் ஆயுதப் படைகளின் வெளிநாட்டு நடவடிக்கைகளினை விரிவுபடுத்தியிருந்தமை என்பதுடன் சமாந்தரமாக பார்க்கப்படவேண்டியதாகும்.

இது தவிர இந்தியாவுடனும் ஜப்பானுடனும் சீனாவுடனான தங்கள் பிராந்திய எல்லைப் பிரச்சினைகளை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதில் படிப்படியாக முன்னேறத் தொடங்கி இருப்பது இவ்விரு நாடுகளினதும் வெளிவிவகாரக்கொள்கைகளின் பிரகாரமான ஒரு சமீபத்திய நடவடிக்கையாகும். டோக்லம் தொடர்பான முரண்பாடுகள் இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அண்மையில் இடம்பெற்றவேளை, இந்தியாவின் ஜப்பானிய தூதர் பூட்டான் மற்றும் சீனா இடையேயான மோதலில் இந்தியாவின் ஈடுபாட்டிற்கான காரணங்களைப் பற்றி தனது நாட்டின் புரிந்துணர்வை வெளிப்படுத்தியிருந்தமை, மற்றும் சீனாவின் ADIZ அறிவிப்பை அடுத்து, இந்தியாவின் கிழக்குப்பகுதி கடல் பகுதியில் ஜப்பானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்திய தொடர்ச்சியாக வெளியிட்டுக்கொள்ளும் கூட்டு அறிக்கைகள் என்பன இது போன்ற ஒன்றிணைந்த செயல்பாடுகளுக்கு உதாரணங்களாக பார்க்கப்படவேண்டியவை.

எது எவ்வாறாயிருப்பினும், இரு நாடுகளுக்கும் ஒரு முக்கிய பொருளாதார பங்காளியான சீனாவை நேரடியாக எதிர்க்க தலைப்படாது என்பதுடன், சீனாவுடன் இணைந்த மூலோபாய பொருளாதார பங்காளித்துவத்தை கட்டமைப்பதில் இன்னமும் ஒருமித்த கருத்துடையவைகளாகவே இருக்கின்றமை அவதானிக்க வேண்டியதாகும். ஆயினும், இந்நிலைமை சமரசம் தற்காலிக இராஜதந்திர மற்றும் இராணுவ சமநிலை சார்ந்த ஒரு கலவை நிலை ஆகுமே அன்றி பிராந்திய அமைதிக்கான நீண்ட கால கொள்கையாக இருக்கப்போவதில்லை. இருந்தபோதிலும், இந்நிலையில் சீனாவை ஒருபக்கமாக பகைப்பதோ, அன்றி மாற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலோ இரு நாடுகளுக்கும் தாற்காலிகமாக முடியாத ஒன்றாகும்,

இப்பட்சத்தில் கிழக்கு ஆசியாவை பொறுத்தவரை, ஐக்கிய அமெரிக்க தென்கொரிய பாதுகாப்பு உடன்படிக்கை மற்றும் அவுஸ்திரேலியா - பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவாக இருப்பதும், மறுமுனையில், தீவிரவாதம் மற்றும் இணைந்த பாதுகாப்பு கொள்கைகள் மூலம் இந்தியா - ஐக்கிய அமெரிக்க வல்லாண்மையை தெற்காசியாவில் நிறுவுதலில் இந்தியாவின் விருப்புக்கு அப்பாற்பட்ட தேவையும் நிறைவேற்றப்பட வேண்டியதே. இவ்வொருமித்த பல்வேறு படிவங்களை கொண்ட அதிகார பரம்பல்களின் மிகச்சிறிய மூலோபாய நடவடிக்கையாகவே இலங்கையில் அண்மைக்காலங்களில் அதிகரித்த அமெரிக்க இராணுவ இணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா தன் மேலாண்மையை காட்டிலும் பொறுத்திருத்தல், மற்றும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்குதலும் இணைத்து பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .