2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதும் பேரினவாதமும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 14ஆம் திகதியன்று,  சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான  வர்த்தமானி அறிவித்தலை  வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. 

அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார்.

சாய்ந்தமருது வர்த்தமானியை இரத்துச் செய்வதற்காக அவர் தெரிவித்த காரணத்தில், இரண்டு கருத்துகள் பொதிந்துள்ளன. முதலாவதாக, அரசாங்கம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்காமல் இருக்கப்போவதில்லை என்பதாகும். இரண்டாவது, வழங்கப்படவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி சபைகளோடு அதுவும் எதிர்க்காலத்தில் வழங்கப்படும் என்பதாகும். 

சாய்ந்தமருதுக்கான சபை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றால், ஏற்கெனவே வழங்கப்பட்டதை ஏன் இரத்துச் செய்யவேண்டும்? வழங்கப்பட்டதை அவ்வாறே விட்டுவிட்டு, ஏனைய சபைகளைப் பின்னர் வழங்கலாமே! “இந்தச் சபையை வழங்கியமைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளாலேயே, இவ்வாறு இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்ப, இல்லை என்றார். அவ்வாறாயின், வழங்கப்பட்டதை விட்டு விட்டு ஏனையவற்றைப் பின்னர் வழங்கலாம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை.

சாய்ந்தமருது சபையானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, தாமாக முன்வந்து வழங்கிய சபையல்ல. முன்னைய அரசாங்கமே அதனை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும்  அதைப் பூர்த்தி செய்யவே, தற்போதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் என்று கூறுவதைப் போல், அச்சபையை நிறுவுவதற்காக முன்னைய அரசாங்கத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அலுவல்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தை, அமைச்சர் குணவர்தன, ஊடகவியலாளர்களிடம் காட்டினார்.

தமது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படும் போதே, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், “இது நாம் ஆரம்பித்து அல்ல; முன்னைய அரசாங்கம் ஆரம்பித்தது” என்று கூறுவர். ஒருவேளை, தாம் எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அமைந்தால், அதற்கான பெருமையை, எந்தவோர் அரசியல்வாதியும் தமது போட்டியாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதில்லை. உண்மையிலேயே, அந்தப் போட்டியாளர்கள்தான் அந்தக் காரியத்தை ஆரம்பித்திருந்தாலும், அதற்கான நற்பெயர் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மற்றவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த திட்டங்களை, அவர்களுக்கு அழைப்பு விடுக்காமலே திறந்துவைக்கும் நாடு இலங்கை மாத்திரமேயாகும்.

அவ்வாறிருக்க, பைஸர் முஸ்தபாதான், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்தாரென்று, அமைச்சர் பந்துல ஏன் கூறவேண்டும்? யாரோ முன்வைத்த விமர்சனத்துக்கே, அதன் மூலம் அவர் பதிலளித்தார் போலத்தான் தெரிகிறது. யார் அவ்வாறு விமர்சித்தவர் அல்லது விமர்சித்தவர்கள்?

எந்தவொரு தமிழ்த் தலைவரும், சாய்ந்தமருதுக்கு நகர சபையொன்றை வழங்குவதை எதிர்க்கவில்லை. அவர்கள், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் என்றே கூறினர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் எடுத்துக்கூறி, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைத் தானே  நிறுத்தியதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதியாகவிருந்து, பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த சனிக்கிழமையன்று  கிழக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். 

ஆனால், அவரே அதற்கு முன்னொருநாள், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தால் கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதுதான் உண்மையென்றால்,  சாய்ந்தமருதுக்கான வர்த்தமானியைத் தானே நிறுத்தியதாக அவர் கூறுவது பொய். அல்லது, கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாவதை அவர் விரும்பவில்லை. 

சில சிங்களத் தனி நபர்களும் சமூக வலைத்தளங்களில் கொக்கரிப்பவர்களும் தவிர, வெளிப்படையாக ஊடகவியலாளர்களை அழைத்து, சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஓர் அமைப்பு மட்டும்தான் இருக்கிறது. அது தான், ராஜபக்‌ஷர்களைத் தெய்வதாக மதிக்கும் டொக்டர் குணதாச அமரசேகர மற்றும் டொக்டர் வசந்த பண்டார ஆகியோர் தலைமையிலான “தேசபக்த தேசிய அமைப்பு” ஆகும். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றைத் தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

இது, பேரினவாதிகளின் மனநோயொன்றையே மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்கள், பிற சமூகமொன்றைத் தாக்கிப் பேச வேண்டும் என்றால், கையிலெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம்தான், “தனி நாடு ஒன்றை உருவாக்கப் போகிறார்கள்” என்ற குற்றச்சாட்டாகும். 

ஒரு காலத்தில், கண்ணில் படும் அத்தனைத் தமிழரும் தனித் தமிழ் நாட்டுப் போராட்டத்துக்கு உதவுவதாகக் கூறினர். சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், “கொட்டியா” (புலி) என்றே திட்டினார்கள். பின்னர், மலையகத் தலைவர்கள், “மலைநாடு என்றதோர் தனி நாட்டை உருவாக்கப் போகிறார்கள்” என்று கூறித் திரிந்தனர். அதற்குப் பதிலளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், “மலைநாட்டை உருவாக்கத் தேவையில்லை. பூமி உருவான நாள் முதல் அது இருக்கிறது” என்று கூறியிருந்தார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவிலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் கல்முனையில் தமிழ்ப் பேசும் கச்சேரியொன்று திறக்கப்பட வேண்டும் என்றும் கோரிய போது, “கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி நாடொன்றை அஷ்ரப் அமைக்கப் போகிறார்” எனக் கூச்சலிட்டனர். 

அதைத் தவிர, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த வர்த்தமானியை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவரது இனவாதப் போக்கைக் கருத்திற்கொள்ளும் போது, அந்தச் செய்தி உண்மையாகவும் இருக்கலாம். மன்னார் பனை அபிவிருத்திச் சபையின் பெயர்ப் பலகையொன்றில், தமிழ் எழுத்துகளுக்குக் கீழே சிங்கள எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமடைந்த விமல், அந்தப் பெயர் பலகையை மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்று வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றை தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருக்கும் கருத்தும் விசித்திரமானதாகும். 

பாரியதோர் முஸ்லிம் பிரதேசத்தைப் பிரித்தே, சாய்ந்தமருது மாநகர சபை உருவாக்கப்பட்டது. முஸ்லிம் பிரதேசங்கள் ஒன்றுசேர்வதற்குப் பதிலாக, பிரிந்து தனி நாடு அமைவது எவ்வாறு? இவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பாததற்குக் காரணம், தனித் தமிழ்நாடொன்று உருவாக அது வசதியாகும் என்பதாலாகும். மாகாணங்கள் இணைவதால் தனிநாடு உருவாகும் என்று கூறும் இந்தப் பேரினவாதிகள், முஸ்லிம் பிரதேசங்கள் பிரிவதாலும் தனிநாடு உருவாகும் என்கிறார்கள்.

கல்முனைப் பிரதேசத்துக்குக் கச்சேரியொன்று வழங்கப்பட வேண்டும் என, இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிய போதும், முஸ்லிம் தனி நாடு வரப்போகிறது என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், சிங்கள் மொழி தெரியாத அம்பாறை மாவட்டத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாலேயே, தமிழ் பேசும் கச்சேரியொன்றை, அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கும் தனிநாட்டுச் சாயம் பூசப்பட்டது. இம்முறை அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இந்த பேரினவாதம் பெரிய அலையாக் கிளம்பாவிட்டாலும், அதற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என்பதே உண்மை. 

புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல

இலங்கையில் கிராம சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ அல்லது 1987ஆம் ஆண்டில் தற்போதைய பிரதேச சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையே கடந்த 14ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகரசபை என்பதைப் போலத்தான், சில பேரினவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், தனியாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சிசபை, சாய்ந்தமருது நகர சபையல்ல.   

அதற்கு முன்னரும் சில இடங்களில் புதிதாகத் தனித்தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், ஏற்கெனவே இருந்த உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அக்காலத்தில் இருந்த நான்கு கிராம சபைகள் ஒன்றிணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது பின்னர் அது நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டு, 2001ஆம் ஆண்டில் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது.

2011ஆம் ஆண்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் உருவாக்கமும் மற்றோர் உதாரணமாகும். அப்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வே உள்ளூராட்சி அமைச்சராகக் கடமையாற்றினார். அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கிருந்த பிரதேச சபையைப் பிரித்து, மாநகர சபையொன்றை உருவாக்கினார். இதற்கு அக்காலத்தில் “கபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுகான பிரசார அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரதேச சபையொன்று முதலில் நகர சபையாகத் தரமுயர்த்தப்படாமல், நேரடியாகவே மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படுவது முறையானதல்ல என்பதே அவர்களது வாதமாகியது. 

அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை பிரித்தெடுக்கப்பட்ட போது, மீதமாக இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 4,000 எனவும் கபே கூறியது. ஆனால், அந்த எதிர்ப்புகளை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதற்கு, மஹிந்த தரப்பு ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதே அரசாங்கத்தில் இருந்தவர்கள்தான், இப்போது சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

சாய்ந்தமருது நகர சபைக்கான ஆர்ப்பாட்டங்கள், 2017ஆம் ஆண்டிலேயே உச்சகட்டத்தை அடைந்தன. அதே காலத்தில், மலையகத்திலும் உள்ளூராட்சி சபைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நான்கு புதிய சபைகளாகப் பிரித்து, எட்டு சபைகளை உருவாக்க வேண்டும் என்பதே மலையகத் தலைவர்களின் குறிப்பாகத் தமிழ் முற்போக்கு முன்னணியின் கோரிக்கையாக இருந்தது.

அந்தக் கோரிக்கைக்காக அவர்கள் முன்வைத்த காரணங்களை எவராலும் மறுக்க முடியவில்லை. இந்த இரண்டு பிரதேச சபைகளினதும் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல சுமார் 100 கிலோமீற்றரைக் கடக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். அதேவேளை, 10,000 மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். 

அவ்வாறிருந்தும், அந்தத் தலைவர்கள் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கமே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. தாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மலையகத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்க வேண்டியிருக்கும் என அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க கூறியதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் கூறியிருந்தார்.

அவ்வாறாயின், அதையும் கொடுங்கள், இதையும் தாருங்கள் என்று அடம்பிடித்து, தாம் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.மலையகத் தலைவர்களின் அந்தப் போராட்டம் வெற்றியளித்தது. 2017  முடிவடைவதற்குள், புதிதாக 6 பிரதேச சபைகளுடன் நுவரெலியாவும் அம்பகமுவவும் சேர்த்து எட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .