2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி

Thipaan   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிகளின் போராட்டத்தினை அடக்கியே வாசித்தது போலுள்ளது.

முடிவுறாத பிரச்சினையாக தொடர்ந்துவரும் இந்த கைதிகளின் விவகாரம் தொடர்பாக, அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், நாடாளுமன்றத்தில் கர்ஜித்தமை பலருக்கு நினைவிருக்கலாம். கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசுத்தரப்பை நோக்கி கேள்விக்கணைகளை வீசினார். அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் இதயசுத்தியோடு செயற்படவில்லை என்று குற்றஞ்சாட்டினர். பேச்சின் இடைநடுவே தாங்கள் அரசாங்கத்தோடு நடத்திவரும் சந்திப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துச்சொன்னார்.

தற்போது உண்ணாவிரதம் முடிவுற்றநிலையில் மீண்டும் அந்த பழைய கள்ளமௌனம் அரசியல்தரப்புக்களை பற்றி படர்ந்திருக்கிறது.

உண்மையில், இந்த அரசியல் கைதிகள் தொடர்பாக அரசாங்கத்தினதும் தமிழ் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரையில் எந்தவிதமான வெளிப்படையான அறிவிப்பும் வெளிவந்தது கிடையாது. இது, இன்னும் எவ்வளவு காலம் தொடரப்போகிறது என்ற கேள்விக்கான விடையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகத்தான் அரசாங்கத்தை நோக்கி நகர்த்துவது இங்கு முக்கியமாகிறது.

தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படுவது இன்று எதிர்கட்சி ஆசனங்களில் இருந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றிருந்தாலும் அரசாங்கத்தின் பல நிலைப்பாடுகளுடன் இணக்கநிலையை பேணும் தரப்பாகவே செயற்பட்டுவருவது அனைவரும் தெரிந்ததே.

இந்த அடிப்படையில், போர் முடிந்து கடந்த ஏழு வருடங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம்தான் தவறாது முக்கியத்துவத்தை பெறுகின்றதே தவிர மற்றும்படி உண்ணாவிரதப்போராட்டங்களின்போது அதனை முடித்துவைப்பதிலும் சம்பிரதாயபூர்வ அறிக்கைகளுடனும் இந்த விவகாரம் தவறாது கிடப்பில் போடப்படுகிறது. அப்படியானால்,அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை என்ன?

தற்போதைய நிலையில், நாட்டிலுள்ள 14 சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் சுமார் 155 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைவிட, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டவர்கள் எந்நேரமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டுவரப்படலாம் என்ற நிலைதான் காணப்படுகிறது. சட்டத்துறையினை பின்னணியாக கொண்டுள்ள கூட்டமைப்பின் பெரும்பாலானவர்களுக்கு இதுவிடயமாக தெளிவான விளக்கமிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அப்படியானால், இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்துடன் இதுவரை எந்த அடிப்படையில் பேச்சுக்கள் நடத்தியிருக்கிறார்கள், அரசாங்கம் கொடுத்துள்ள உறுதிமொழிகளுக்கு காலக்கெடு என்ன, 10-15 வருடங்களுக்கு மேலாக தடுப்பிலுள்ள இந்த கைதிகளின் விடுதலைக்கு இன்னமும் அரசாங்கம் கூறுகின்ற காரணம் என்ன?

தனது மகனை பிணையில் விடுதலை செய்வதற்காக, கறுப்பு அங்கி அணிந்து சட்டவாளராக நீதிமன்றுக்கு சென்ற மஹிந்தவின் ஓர்மத்தைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றுவரை தமக்கு வாக்களித்த மக்களின் சொந்தங்களின் விடுதலைக்காக காண்பிக்கவில்லை என்பது வருத்தமான உண்மை. அந்த கைதிகளின் சட்ட ரீதியான விடுதலை முயற்சிகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு மேலாக அரசியல் ரீதியாக இந்த விடயத்தினை அணுகுவதற்கு எவ்வளவு தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று கூட்டமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் யாராவது பட்டியல்படுத்த முடியுமா?

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் நிறைவடையப்போகின்றன. இன்று சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் - 10 -15 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட பலர் சிறைவாசம் அனுபவித்து பல்வேறு செல்வாக்குகளினாலும் ஒருதலைப்பட்சமான அரசியல் முடிவுகளினாலும் விடுதலை செய்யப்பட்டு அவர்களது வாழ்க்கையின் பாதை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய அரசியல் கைதிகள் மாத்திரம் தொடர்ச்சியாக தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைவாசத்துக்;கே காணிக்கையாக்கியவர்கள் போல கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், இலங்கைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாது, அதனை சரியான வழியில் கொண்டு நடத்துவதற்காக ஜெனீவா தீர்மானத்தினை வரைவதில் ஒத்துழைப்பு வழங்குமளவுக்கு அந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டில் இடம்பெற்ற போர் தொடர்பான சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை ஒரு தீர்க்கமான இணக்கப்பாட்டை எட்டாதது ஏன்?

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் சிறப்பு ஏற்பாடாக இணைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பிரகாரம் எவ்வாறு இளைஞர்கள் அனைவரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்களோ அதேபோன்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தாதது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தெரிந்த விடயம் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் எனப்படுவது சட்ட ரீதியானது அல்ல. அது அரசியல் ரீதியானது. இதனை கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக முடிவு காண்பதற்கு தாம் முயற்சிப்பதாகவும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் பிரகாரம் விடுதலை செய்ய வலியுறுத்தினால் நாளை போர்க்குற்ற விசாரணைகளின்போது இராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பை கோரிவிடுவார்கள் என்றும் வாதங்களை முன்வைப்பது இப்போதைக்கு தேவையற்ற விடயம்.

நடக்குமோ, நடக்காதோ என்று தெரியாத போர்க்குற்ற விசாரணையின்போது, கைது செய்யப்படுவார்களோ செய்யப்படமாட்டார்களோ என்று தெரியாத இராணுவத்தினரின் விடயத்தை இப்போது கவனத்திற்கொண்டு, தீர்க்கதரிசனமாக சிந்திப்பதாக திருப்திப்பட்டுக்கொண்டு, 10-15 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வழிகளை நாங்களாகவே மூடிவைத்திருப்பது அரசியல் சாணக்கியமாகிவிடாது.

போர் முடிந்த பின்னர் கடந்த ஆட்சிக்காலத்தின்போது எதுவும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது என்ற காரணத்தினை முன்வைத்தாலும், தற்போது நடைபெறுகின்ற மைத்திரியின் நிர்வாகத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவது நல்லாட்சியின் தோல்வியே அன்றி வேறில்லை.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை தருவதாக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்து உறுதிமொழிகளை மாறி மாறி வழங்கினாலும், அந்த தீர்வுக்கு ஆதாரமான நல்லிணக்கம் எனப்படுவது சிறுபான்மையின மக்களை நோக்கி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது வெள்ளிடைமலை. அதற்கு மிகச்சரியான உதாரணம் அரசியல் கைதிகள் விவகாரம் ஆகும்.

நல்லாட்சி எனப்படுவது சரியான நிர்வாகமும் மக்கள் ஆணைக்கு நன்மதிப்பையும் வழங்கும் புள்ளியிலிருந்து சீர்தூக்கி பார்க்கப்படுவதே தவிர மஹிந்தவின் ஆட்சியை மையமாகக்கொண்டு வரைவிலக்கணம் எழுதப்படுவது அல்ல. இதனை நாட்டுமக்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு வருகின்றன. மைத்திரி அரசின் வினைத்திறன் குறித்த விமர்சனங்களும் விசனங்களும் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.

இலங்கை என்ற நாட்டில் எந்த நற்காரியம் நடைபெறுவதானாலும் அது தற்போதைய ஆட்சிக்காலத்தில்தான் அது நடைபெறுவதற்கான ஏதுநிலைகள் உண்டு. அதனை கடந்த தேர்தலில் மக்கள் உணர்ந்தது போல தற்போது அரசாங்கமும் உணர்ந்துகொண்டால், அரசாங்கம் அடிக்கடி கூறுவதுபோன்ற சுபீட்சமான எதிர்காலம் நாட்டுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. அல்லது, தற்போது நடைபெற்றுவருகின்ற தன்நேச பின்னணிகொண்டு தந்திரோபாய நிகழ்ச்சிநிரலை அண்டிய நிர்வாகத்தின் சிற்களில் ஆட்சியை நகர்த்திச்செல்வதற்கு சூழ்ச்சிவலைகளை பின்னி அதில் வெற்றி கொள்வதற்கு சிங்கள அரசு முயற்சிக்குமானால், அது மீண்டும் மஹிந்தவின் மயான ஆட்சிக்கே நாட்டைக்கொண்டு போய் நிறுத்தும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--