2021 ஜனவரி 20, புதன்கிழமை

தோற்கடிக்கப்பட்ட புறக்கணிப்பு அரசியல்

கே. சஞ்சயன்   / 2019 நவம்பர் 22 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் இருவேறு தரப்புகளின் பின்னால் நின்ற போதும், இந்தத் தேர்தலை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தமுறையும் மூக்குடைபட்டிருக்கிறது.  

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பலமான பிரசாரங்களைக் கூட முன்னெடுத்திருந்த போதும், வடக்கு, கிழக்கில் அதற்கு யாருமே செவிசாய்க்கவில்லை என்பதே உண்மை.  

ராஜபக்‌ஷ ஆட்சியின் மீது, தமிழ் மக்கள் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததை விடவும், வடக்கு, கிழக்கில் இந்தமுறை அதிகளவில் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது.  

வடக்கைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களில் 2015இற்கும் 2019இற்கும் இடையில், வாக்களிப்பு சதவீதத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லாவிடினும், குறிப்பிடத்தக்க வாக்களிப்பு அதிகரிப்பு நிகழ்ந்திருக்கிறது.  

யாழ்ப்பாணத்தில் 2015, 66.28 சதவீதமாக இருந்த வாக்களிப்பு, இந்த முறை 68.03 சதவீதமாகவும் வன்னியில் 2015இல் 72.57 சதவீதமாக இருந்த வாக்களிப்பு இம்முறை 76.59 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.  

கிழக்கைப் பொறுத்தவரையில் கணிசமானளவுக்கு வாக்களிப்பு அதிகரித்திருக்கிறது. அம்பாறையில் 77.4 சதவீதம் அளிக்கப்பட்ட வாக்குகள், இந்தமுறை 82.32 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  

மட்டக்களப்பில் கடந்தமுறை 71 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. இந்தமுறை அது, 77.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.  

திருகோணமலையில், 76.8 சதவீதம் அளிக்கப்பட்ட வாக்குகள், இந்தமுறை 82.97 சதவீதமாக உயர்ந்திருக்கிறது; அளிக்கப்பட்ட வாக்குகள் யாருக்கு அளிக்கப்பட்டன, யார் வெற்றி பெற்றார் என்பதையெல்லாம் ஒதுக்கி விட்டு, வாக்களிப்புப் பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டு, இந்தப் பத்தி ஆராய்கிறது.  

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில், வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில், நீண்டகாலமாகவே ஓர் அந்நிய நிலை இருந்து வந்தது. அந்தநிலை, தமிழ் பேசும் மக்களிடம் மாறத் தொடங்கியிருக்கிறது என்பதையே, இந்தமுறை வாக்களிப்புப் பாரம்பரியம் எடுத்துக் காட்டுகிறது.  

இது சிங்களத் தலைவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மட்டுமே; இதில் தமிழர்களுக்கு என்ன வேலை; யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை; யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களுக்கு எதையும் செய்து விடப் போவதில்லை; பேய்க்கும் பிசாசுக்கும் இடையில் எப்படி வித்தியாசத்தைக் கண்டுணர்வது; மோதகமும் கொளுக்கட்டையும் தான் என்பன போன்ற பிரசாரங்களும் கேள்விகளும் வழக்கமாகவே, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தமிழ் மக்கள் மத்தியில் எழுவதுண்டு.  

இந்தமுறையும் கூட, அவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு, தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. ஆனாலும், அவர்களின் அந்தக் கோரிக்கை, நவம்பர் ஏழாம் திகதிக்கு முன்னரே, தோல்வி காணத் தொடங்கி விட்டது.  

அதாவது, வடக்கு, கிழக்கில் அஞ்சல் மூல வாக்களிப்பு, 95 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. அதன் மூலம், தேர்தல் புறக்கணிப்புக்கு, மக்களின் ஆதரவு இல்லை என்பது, ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது.  

அதற்குப் பிறகாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது முடிவை மீளாய்வு செய்திருக்க வேண்டும்; தமது நிலைப்பாட்டை, வலியுறுத்தாமல் தவிர்த்திருக்க வேண்டும்  
அரசியல் என்பது, மக்களுக்கானதே தவிர, அரசியலுக்காக மக்கள் அல்ல. இந்தச் சித்தாந்தத்தில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விலகியே இருந்து வருகிறது.  

உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த ஆதரவை வைத்துக் கொண்டு, மீண்டும் ஒரு புறக்கணிப்புக் கோரிக்கையை விடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது பலத்தைக் காட்ட முயன்றது.  

ஆனால், வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களை விட, அதிகளவில் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது. சாராசரியாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 77.41 சதவீதம் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது. இதில், வடக்கு மாகாணத்தில், சராசரி வாக்களிப்பு சதவீதம் 72.31 சதவீதம் தான்.  

அதற்காக எஞ்சியுள்ள மக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முடிவை, ஆதரித்து வாக்களிக்காமல் புறக்கணித்தனர் என்ற வரட்டுவாதத்தை முன்வைக்கக் கூடாது.  

வடக்கைப் பொறுத்தவரையில், ஜனாதிபதித் தேர்தலின் மீது குறைந்தளவு அக்கறையே இருந்து வந்திருக்கிறது. வாக்களிப்பு இந்தமுறை தான் ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது. வடக்கில் பெரும்பாலான மக்கள், ஜனாதிபதி தெரிவு விடயத்தில், இயல்பாகவே அக்கறை கொண்டிருப்பதில்லை.  

எனவே, தெற்கில், கிழக்கில் இடம்பெற்றது போன்ற வாக்களிப்பு சதவீதத்தை, வடக்கில் எதிர்பார்க்க முடியாது.  

ஆனாலும், வடக்கு முன்னைய நிலையில் இருந்து மாறத் தொடங்கியிருக்கிறது என்பதை, கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் உணர்த்தி இருப்பதாகவே தோன்றுகிறது.  

கடந்த முறை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களிப்பதற்காகத் திரண்ட வடக்கு மக்கள், இந்தமுறை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள்.  

கடந்த முறை மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி காரணமாக, இந்த வாக்குகள் இருந்தன. இந்தமுறை வடக்கில் 83.2 சதவீதமும் கிழக்கில் 70.3 சதவீதமும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக விழுந்த போதும், அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை.  

இதனை, மஹிந்த அல்லது கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்ப்பு வாக்குகள் என்று பார்ப்பதா, மைத்திரிபால சிறிசேன ஆதரவு, சஜித் ஆதரவு வாக்குகள் என்று பார்ப்பதாக என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது.  

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், யாருக்கு ஆதரவு என்பதை விட, யாருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, அதனைச் சுதந்திரமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை.  

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே, அதற்கான அறிகுறிகள் தமிழ் மக்களிடம் தென்பட்டன. தமிழ் மக்களின் உணர்வுகளும் கருத்துகளும் அவ்வாறே இருந்தன.  ஆனால், அதைத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும், சரியாகப் புரிந்து கொண்டனவா என்பது தான் கேள்வி.  

மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு செய்யப்படும் அரசியலே முக்கியமானது. அரசியல் கட்சிகளுக்கு, வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் மக்களின் கருத்தை அறிந்து கொள்வது முக்கியமானது.  

அதிலிருந்து, அந்நியப்பட்டுச் செல்லும் கட்சிகளால், மக்களின் ஆதரவைப் பெறமுடியாது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்பட்ட நிலை அதுதான்.  

வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னரே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தோற்கடிக்கப்பட்டு விட்டது.  

தமிழ் மக்கள், கடந்த முறையை விட, அதிகளவில் வாக்களித்ததன் மூலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்.  

அதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தமிழ் மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றோ, அதன் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ பொருள் இல்லை.  

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில், அவர்களின் கொள்கை, நிலைப்பாட்டைத் தோற்கடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.  

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் என்பது, தமிழ் மக்களுக்குப் புதியதொன்று அல்ல.  
1982 ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தாய்க் கட்சியான, தமிழ்க் காங்கிரஸின் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை முன்வைத்தது.  

அதற்குப் பிந்திய தேர்தல்களில், தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிக்கக் கூடிய சூழலோ, வாய்ப்போ இருக்கவில்லை.  

ஆயினும், 2005 ஜனாதிபதித் தேர்தலைப் பெரும்பாலான வடக்கு மக்கள் புறக்கணித்ததன் மூலம், ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார்; மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார்.  

அதற்குப் பிறகு நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனாலும், இந்த விடயத்தில், தமிழ் மக்களின் ஆதரவு, அதற்குக் குறைந்து கொண்டே வருகிறது என்பதைத் தான், இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.  

தமிழ் மக்கள், தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் இருந்து விலகி, ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் அரசியலை முன்னெடுக்கவே விரும்புகிறார்கள் என்பதை, இதன் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.  

ஜனாதிபதித் தேர்தல் அந்நியமானது என்றாலும், தாம் விரும்பும் ஒருவர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதற்குப் பதிலாக, தாம் விரும்பாத ஒருவர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வது முக்கியம் என்பதில், அவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.  

அதிகரிக்கத் தொடங்கியிருக்கிற வாக்களிப்பு அதிகரிப்பு சதவீதம், அதனைத் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது.  

இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது, தமிழ் அரசியல் கட்சிகள், தேர்தல் புறக்கணிப்புக்கு மாற்றான, புதிய அரசியல் மூலோபாயங்களைத் தேடிக் கண்டறிவது முக்கியம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .