2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தி.மு.க, அ.தி.மு.கவுக்;கு எதிராக 'பஞ்சபாண்டவர்' அணி

Thipaan   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பஞ்சபாண்டவர் அணி' என்று சமூக வலைத்தளங்களில் வர்ணிக்கப்படும், விஜயகாந்த் தலைமையிலான 'கேப்டன் விஜயகாந்த் கூட்டணி' உருவாகி விட்டது. விஜயகாந்த் தலைமையை ஏற்று, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஓரணியில் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக வந்திருக்கும் 'கேப்டன் விஜயகாந்த் அணி' அ.தி.மு.க மற்றும் தி.மு.கவுக்குப் போட்டியாக இறங்கியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி 'தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2016 சட்டமன்ற தேர்தலை தனியாக சந்திக்கும்' என்று அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அறிவித்தார் விஜயகாந்த். அது மட்டுமின்றி, 'எனக்கு கூட்டணி பற்றி எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக இருக்கிறேன். தனித்துப் போட்டி' என்றார். அந்த அறிவிப்புக்கு அவரது கட்சியிலும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் அவரைத் தேடி வைகோவும் போகவில்லை. திருமாவும் போகவில்லை. பா.ஜ.க. சார்பிலும் யாரும் போகவில்லை. 'நாங்கள் ஏற்கெனவே அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முடிவு எடுக்க வேண்டியது விஜயகாந் தான்' என்று கூறி விட்டு அமைதி காத்தார்கள்.

இந்த நிலையில்தான் மார்ச் 21ஆம் திகதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. நம்மை தேடி யாரும் வர மாட்டார்கள் என்பதை உணர்ந்த விஜயகாந்த், தனது கட்சியின் சார்பில் சுதிஷ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை வைகோ உள்ளிட்ட நால்வரணியினரை சந்தித்துப் பேச உத்தரவிட்டார். அதன்படி அன்றைய தினம் சென்னை சூளையில் உள்ள எல்.ஐ.சி விருந்தினர் மாளிகையில், தே.மு.தி.க மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் மத்தியில் சந்திப்பு நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிந்து பிரேமலதா விஜயகாந்தும் சுதிஷும் மகிழ்ச்சிகரமாக வெளியே வந்தார்கள். அப்போதே மக்கள் நலக்கூட்டணியுடன் இணையும் முடிவுக்கு வந்தது தே.மு.தி.க.

இதன் அடுத்தகட்ட அறிவிப்புதான் மார்ச் 23 ஆம் திகதி கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு வைகோ, விஜயகாந்த், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் ஆஜரானார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், அங்கேதான் 'தே.மு.தி.கவுக்கு 124 தொகுதிகள். மக்கள் நலக்கூட்டணிக்கு 110 தொகுதிகள்' என்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, கூட்டணி அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டணி அறிவிப்பால் தி.மு.க ஏமாற்றம் அடைந்தது. அதாவது, 'தே.மு.தி.க வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று அதற்கு மூன்று தினங்களுக்கு முன்புதான் தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். கூட்டணி அறிவித்த இடத்திலேயே வைகோ 'இனி இந்த அணி, கேப்டன் விஜயகாந்த் அணி' என்று அழைக்கப்படும் என்றார். விஜயகாந்தும் தன் பங்குக்கு, 'இந்த அணிக்கும் வைகோதான் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்' என்று அறிவித்தார்.

அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்றாக, 1989க்கும் பின்னர், ஒரு மூன்றாவது அணி தேர்தலில் முளைத்திருக்கிறது. ஆனால், 1989இல் காங்கிரஸ் கட்சி மட்டுமே மூன்றாவது அணியாக இருந்தது. இப்போது ஐந்து கட்சிகள் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அணி தமிழகத்தில் மாற்றத்தை தந்து விடுமா அல்லது தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக அமைந்து விடுமா என்ற கேள்வி இன்னும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இந்த மூன்றாவது அணியின் வாக்கு வங்கி என்று எடுத்துக் கொண்டால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2 சதவீதம், திருமாவளவன் 1 சதவீதம், வைகோ 2 சதவீதம், விஜயகாந்த் அதிக பட்சமாக 6 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், இந்த மூன்றாவது அணியின் வாக்கு வங்கி பலம் 11 சதவீதத்துக்கு மேல் போகாது என்பதே தேர்தல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த 11 சதவீதம் கூட, ஐந்து தலைவர்களும் இனி எப்படி ஒற்றுமையாக பிரசாரத்தை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது.  ஏனென்றால், இப்போதே 'மக்கள் நலக்கூட்டணி' என்றுதான் இயங்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்திருக்கிறார். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நடுநிலையாளர்கள் பலரின் கண்டனத்தை கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, அது தேர்தல் முடிந்து சட்டமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட வேண்டிய முடிவு என்று கூறிய வைகோ, ஏன் இப்போது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக இப்போதே அறிவித்து விட்டார் என்ற சர்ச்சை, சமூக வலைத்தளங்களில் புறப்பட்டு இருக்கிறது. பத்திரிகை பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களிலும் எதிரொலிக்கிறது. ஆகவே இந்த நிலையில் ஐவரணி முறையாக பிரசாரம் செய்து, தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் மாற்றாக தாக்குப் பிடித்து நின்றால், 10 முதல் 12 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த மாற்று, தி.மு.க, அ.தி.மு.கவுக்கு போட்டியாக உருவெடுத்து விட முடியுமா, அதற்கான வாய்ப்பு இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தக் கூட்டணி பெற்ற வாக்குகள் 51 சதவீதம். இந்த 51 சதவீதத்தில் அன்றிருந்த செல்வாக்கின் அடிப்படையில் தே.மு.தி.க 8 சதவீதம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 சதவீதம், புதிய தமிழகம் மற்றும் மனித நேயக் கட்சிகள் 1 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் கூட இந்த கட்சிகளின் வாக்கு வங்கி  12 சதவீதமாகும். இந்த 12 சதவீதத்தை கழித்தால் அ.தி.மு.கவின் வாக்கு வங்கி 39 சதவீதம். இந்த 39 சதவீத வாக்குகளில் அன்றைக்கு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசுக்கு எதிரான 'எதிர்ப்பு அலை' 5 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் கூட, 2011 தேர்தல் முடிவுகளின் படி, இன்றைய தினம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கி 34 சதவீதம். இதில் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்ததால், அந்த வாக்காளர்கள் கூட்டணி மாறி வாக்களித்ததில் அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட 'இலாப வாக்குகளும்' இருக்கின்றன. அ.தி.மு.கவின் 34 சதவீத வாக்கு வங்கி என்பது கடந்த காலங்களில் (1996 சட்டமன்ற தேர்தல் தவிர) அக்கட்சி ஆட்சியிலிருந்து வெளியேறிய காலகட்டத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.கவுக்கு சாதகமான சூழலில் கிடைத்த வாக்கு சதவீதம் இந்த 34 சதவீதம் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சியுடன் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் இடம்பெற்றன. இந்த கட்சிகளுடன் தேர்தலை சந்தித்த தி.மு.க 2011 சட்டமன்ற தேர்தலில் 39.83 சதவீத வாக்குகளைப் பெற்றன. அப்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பிரசாரம் உச்சத்தில் இருந்த வேளை பெற்ற வாக்கு இது. இதன்படி பார்த்தால் இப்போது காங்கிரஸ் கூட்டணி தி.மு.கவுடன் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை.

அந்த இரு கட்சிகளும் சேர்ந்து, தி.மு.கவுக்கு 4 சதவீத வாக்குகளை 2011 சட்டமன்ற தேர்தலில் கொடுத்திருந்தால், அதுவே பெரிய விடயம் என்றே கருத வேண்டும். ஏனென்றால், இந்த இரு கட்சிகளின் வாக்காளர்களும் ஒத்த கருத்து உள்ளவர்கள் அல்லர். ஒரே கூட்டணியில் நின்று வாக்குப் போடும் மனம் பெற்றவர்களும் அல்ல. ஒருவருக்கொருவர் 'எலியும் பூனையுமாக' இருந்த வாக்காளர்களை ஒரே அணியில் தி.மு.க கொண்டு வந்தது. ஆனால் அவர்களால் வாக்கு வங்கி கிடைக்கவில்லை. ஆகவே இந்த இரு கட்சிகளின் 4 சதவீத வாக்குகளை கழித்து விட்டால், இன்றைக்கு தி.மு.க - காங்கிரஸின் வாக்கு வங்கி 35.83 சதவீதம். இத்துடன் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை சேருகின்றன.

அவர்களின் வாக்கு வங்கி 1 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் கூட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 36.83 சதவீதம் ஆகிவிடும்.

இப்படிப்பட்ட தேர்தல் களத்தில் அ.தி.மு.கவின் தேர்தல் யுக்திகள், அக்கட்சிக்கு எதிராக பல கட்சிகளும் பிரிந்து நிற்பது சாதகமான அம்சங்கள், ஆனால் செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்புக்கு பின்னர், அக்கட்சி மீது கிளம்பியிருக்கும் 'அதிருப்தி அலை' ஒரு மைனஸ். அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் மாநிலத்தில் ஆட்சி செய்வதாலும் அதிருப்தி அலை இருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. அரசுடன் நெருக்கமாக இருப்பதாலும் அதிருப்தி நிலவுகிறது. இந்த இரு அதிருப்தியுமே தி.மு.கவுக்கு இல்லை. தி.மு.கவை பொறுத்தமட்டில் முந்தைய தேர்தல்கள் போல் வாக்கு வங்கி உள்ள பல கட்சிகளைச் சேர்த்து 'மெகா கூட்டணி' அமைக்க முடியவில்லை. அது மைனஸ். ஆனால் இதுவரை தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கட்சி 'பொஸிட்டிவ் வாக்குகளைப் பெற்று' மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பது தி.மு.கவுக்கு சாதகமான அம்சம்.

ஆகவே தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. அனல் பறக்கும் கோடை வெயில் ஒரு புறம் என்றால், அனல் பறக்கும் பிரசாரம் இன்னொரு பக்கம் என்று மக்களை இன்னும் இரு மாதங்கள் வாட்டி எடுக்கப் போகிறது. பல முனைப் போட்டியில் அ.தி.மு.கவையும், தி.மு.கவையும் 'தே.மு.தி.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி' வீழ்த்த முடியாது. ஆனால் அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்;கும் இடையே உள்ள போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பது மட்டுமே இப்போதைய நிலவரம். காலப்போக்கில் பிரசாரங்களின் வியூகங்கள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதை வைத்து முந்துவது யார், பிந்துவது யார் என்பது முடிவாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .